பெட்டாலிங் ஜெயா: அடுத்த மாதத்திலிருந்து (ஜூலை) மலேசியர்கள் அனைவரும் கழிவு விலையில் ஒரு லிட்டர் டீசலை 2.1 ரிங்கிட் என்ற சலுகை விலையில் பெற்றுக்கொள்ளலாம் என்று அந்நாட்டின் நிதியமைச்சு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அமல்படுத்தப்படவுள்ள இந்த மானிய டீசல் விலை குறைப்புத் திட்டம், ‘புடி மதானி’ திட்டத்தைப் போலவே ‘மைக்காட்’ அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்று அந்த அமைச்சு கூறியது.
“இதனால் மலேசியர்கள் அனைவரும் நாடு முழுவதும் ஒரே விலையிலும், ஒரே வழிமுறையிலும் டீசலைப் பெற்றுப் பயனடைவார்கள். ‘மைக்காட்’ சரிபார்ப்பு மூலம் மலேசியர்களுக்கு மட்டும் இந்த டீசல் மானியம் நேரடியாகச் சென்றடையும்.
“அதேவேளையில், வெளிநாட்டினருக்கும் அதற்குத் தகுதி பெறாதவர்களுக்கும் மானியமில்லாத விலையில் டீசல் விற்கப்படும்,” என்று அமைச்சு குறிப்பிட்டது.
தீபகற்ப மலேசியாவில் மானியமில்லா டீசல் ஒரு லிட்டர் விலை 4.37 ரிங்கிட்டாக உள்ளது.
சாபா, சரவாக் மாநிலங்களில் ஒரு லிட்டர் டீசல் 2.15 ரிங்கிட் என்ற மானிய விலையில் விற்கப்படுகிறது.
புதிய திட்டத்தின்படி, சாபா, சரவாக் மாநிலங்களிலும் டீசல் வாகனங்களை வைத்திருக்கும் மலேசியர்களுக்கான சில்லறை விலை லிட்டருக்கு 2.15 ரிங்கிட்டிலிருந்து 2.10 ரிங்கிட்டாகக் குறையும்.
அரசாங்கத்தின் மானியங்கள் மலேசியக் குடிமக்களை மட்டுமே சென்றடைவது மிக முக்கியம் என்று நிதியமைச்சு வலியுறுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்த டீசல் மானிய அமலாக்கம் குறித்த கூடுதல் விவரங்களை, இரண்டாவது நிதியமைச்சர் அமீர் ஹம்சா அசிசான் திங்கட்கிழமை (ஜூன் 22) அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று அறிக்கை தெரிவித்தது.

