வாஷிங்டன்: இந்தியாவுடனான உயர்மட்ட வணிகப் பேச்சுவார்த்தைகள் விரைவில் முடிவுக்கும் வரும் என்றும் மாறுபட்ட உடன்பாட்டை இருநாடுகளும் எட்டும் தருணம் நெருங்கி வருகிறது என்றும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்தார்.
அதுப விவரங்களை என்டிடிவி ஊடகம் வியாழக்கிழமை (அக்டோபர் 22) வெளியிட்டது.
சந்தைகளை விரிவாக்குதல், நீண்டகாலமாக நிலவிவரும் வரிவிதிப்பு சார்ந்த கருத்துவேறுபாடுகளைக் களைதல், வேளாண்பொருள்கள், தொழில்துறை உற்பத்திப் பொருள்கள் வணிகத்தில் ஏற்பட்டுள்ள தடைகளை அகற்றுதல் ஆகிய அம்சங்கள் குறித்து இருதரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன.
அவை கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக நடந்துவரும் நிலையில், இதுவரை எட்டப்பட்ட ஒப்பந்தங்களைவிட இந்த உடன்பாடு பெரிய அளவில் மாறுபட்டிருக்கும் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
ஒப்பந்தம் எவ்விதத்தில் வேறுபட்டிருக்கும் என்பதை அவர் விளக்கவில்லை. வெள்ளை மாளிகையில் இந்தியாவுடன் வணிக ஒப்பந்தம் செய்யப்படுமா என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக திரு டிரும்ப் கருத்துரைத்தார்.
முழு உடன்பாடு கையெழுத்தாவதைத் தடுக்கும் அம்சங்கள் குறித்தும், பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வருக்கூடிய தேதியையும் அவர் குறிப்பிடவில்லை.
அமெரிக்கா - இந்தியா இடையிலான உடன்பாட்டை இருநாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களும், ஏற்றுமதியாளர்களும், முதலீட்டாளர்களும் உன்னிப்பாகக் கவனித்துவருகின்றனர். அதன் பின்னணியில் வணிகப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது என்பதை உணர்த்தும் விதமாக அதிபர் டிரம்ப்பின் கருத்துகள் வெளிவந்துள்ளன.
இதற்கிடையே, மூன்று நாள் பயணமாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ இந்தியா சென்றுள்ளார். அங்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் முக்கியப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
வணிகம், எரிபொருள், தொழில்நுட்பம், தற்காப்பு, மக்கள் தொடர்பு போன்றவற்றுடன் இருநாட்டு நல்லுறவை வலுப்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் கவனம் செலுத்துகின்றனர்.
