கோலாலம்பூர்: மத்திய கிழக்கு மோதல் காரணமாக எரிசக்தி நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்க மலேசிய அரசாங்க ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலைசெய்யும் நடைமுறை புதன்கிழமை (ஏப்ரல் 15) முதல் நடப்புக்கு வந்தது.
அரசாங்கத்தின் அந்தத் திட்டத்தில் கிட்டத்தட்ட 200,000 ஊழியர்கள் பங்கேற்று வீட்டிலிருந்து வேலைசெய்வார்கள் என்று மலேசிய அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் ஷாம்சுல் ஆஸ்ரி அபு பக்கார் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) தெரிவித்திருந்தார்.
ஆனால், அதிகாரிகள் பணியில் தொய்வு காட்டாமல் இருப்பதை உறுதிசெய்வதற்காக மேற்கொள்ளப்படும், ‘மணிக்கு ஒருமுறை வருகைப் பதிவு’ என்பது குறித்து சில அதிகாரிகளும் ஊழியர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
வீட்டிலிருந்து வேலைசெய்யும்போது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை ஊழியர்கள் தங்களது வேலைக்கான இணைய வருகையைப் பதிவுசெய்யுமாறு கூறுவது சிரமமாக உள்ளது என்கின்றனர் அவர்கள்.
மனிதவள அதிகாரியாகப் பணியாற்றும் திருவாட்டி நீசா என்பவர் கூறுகையில், “ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை வருகையைப் பதிவு செய்வது மிகவும் சிரமமாக இருக்கிறது.
“நான் கணினிப் பணிக்குள் உள்நுழைந்ததற்கு ஆதாரமாகப் படங்களை ‘ஸ்கிரீன்ஷாட்’ எடுத்து வைத்துக்கொண்டு வருகையைப் பதிவு செய்கிறேன்,” என்றார்.
“வேலைசெய்துகொண்டிருக்கும் அதேவேளை மணிக்கு ஒரு தடவை வருகைப் பதிவின்மீது கவனம் செலுத்த வேண்டி உள்ளது. அது வேலையைப் பாதிக்கிறது. அதற்காகவே ஒரு நினைவூட்டியை ஏற்பாடு செய்ய வேண்டி உள்ளது,” என்றும் கூறினார் திருவாட்டி நீசா.
மற்றோர் ஊழியரான சாரா, அலுவலகத்தில் பணிபுரிந்ததைவிட வீட்டில் மிகவும் பரபரப்பாக இருப்பதாகக் கூறுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
“வேலைசெய்ய வேண்டும்; இடையிடையே ஒவ்வொரு மணி நேரமும் பதிவேட்டில் வருகையைப் பதிவுசெய்ய வேண்டும் என்பதால் என்னால் ஒரு சிறு இடைவேளைகூட எடுக்க முடியவில்லை,” என்றார் அவர்.
“வீட்டிலிருந்து வேலை செய்வதில் நன்மை, தீமை இரண்டும் உள்ளன. காலைநேரப் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க முடிகிறது. அதேநேரம், பணிச்சுமை மிகவும் அதிகமாக உள்ளது,” என்று கூறினார் அந்த 29 வயதுப் பெண் ஊழியர்.
தமது பெட்டாலிங் ஜெயா வீட்டிலிருந்து வேலை செய்யும் 32 வயது திரு. ஹம்தானும், ஒவ்வொரு மணிநேரமும் வருகைப் பதிவேட்டில் பதிவு செய்வது வேலைக்கு இடையூறாக இருப்பதாகக் கூறினார்.
“வீட்டிலிருந்து வேலைசெய்வது என்பது கண்டிப்பாக வீட்டிலிருந்து வேலைசெய்வதாகவே இருக்க வேண்டும். அலுவலகத்திற்கு வெளியே வேறு எங்காவது இருந்துகொண்டு வேலைசெய்வதாக அது இருக்கக்கூடாது,” என்றார் திரு ஹம்தான்.

