ஆஸ்திரேலியப் பள்ளியில் டைனோசர் காலடித்தடங்கள்

ஆஸ்திரேலியப் பள்ளியில் டைனோசர் காலடித்தடங்கள்

1 mins read
ec83a6f7-f2a3-4e87-94fc-a99ee1f78a4b
டைனோசர் காலடித்தடங்கள் பதிவான பாறை ஒன்று பள்ளி வளாகத்தில் இருந்தது. - படம்: ஏஎஃப்பி

சிட்னி: ஆஸ்ரேலியாவில் உள்ள பள்ளி ஒன்றின் வளாகத்தில் இருந்த பாறையில் டைனோசர் காலடித்தடங்கள் பதிந்திருப்பது காணப்பட்டதாக புதன்கிழமையன்று (மார்ச் 12) விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

டைனோசர் காலடித்தடங்கள் பதிந்துள்ள இந்தப் பாறையை 20 ஆண்டு காலமாக யாரும் அதிகம் கண்டுகொள்ளவில்லை. பிறகு பாறை இருந்த பள்ளி, ஆன்டனி ரொமிலியோ எனும் பழவூற்றியலாளரைச் (paleontologist) சோதனையிடுமாறு கேட்டுக்கொண்டதையடுத்து பாறையில் டைனோசர் காலடித்தடங்கள் பதிந்திருப்பது தெரிய வந்தது.

சம்பந்தப்பட்ட பள்ளி, குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் இருக்கும் பனானா ‌ஷையர் எனும் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது. மூன்று கால்விரல்கள் கொண்ட காலடித்தடப் பதிவுகள் இருக்கும் இந்தப் பாறையைச் சோதனையிடுமாறு அப்பள்ளி பழவூற்றியலாளரைக் கேட்டுக்கொண்டது.

பாறையில் காணப்படும் காலடித்தடங்கள், ஏறத்தாழ 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஜியூரேசிக் யுகத்தில் பதிவானவை என்று டாக்டர் ரொமிலியோ தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் ஓரிடத்திலோ ஒரு பொருளிலோ ஆக அதிகமான டைனோசர் காலடித்தடங்கள் பதிவான சம்பவங்களில் இந்நிகழ்வு அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இவ்வளவு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு பொருள் இத்தனை காலமாக ஒரு பள்ளி வளாகத்தில் இருந்தது ஆச்சரியமானது,” என்றார் டாக்டர் ரொமிலியோ.

குறிப்புச் சொற்கள்