ஒட்டாவா: உடற்குறையுள்ள பயணி ஒருவருக்கு விமானத்திற்குள் செல்ல சக்கர நாற்காலி வழங்கத் தவறியதற்காக ஏர் கனடா விமானம் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
தனது இருக்கையிலிருந்து விமானத்தின் நுழைவாயில் வரை அந்தப் பயணி தன் கையைப் பயன்படுத்தி ஊர்ந்து சென்றதாக கூறப்பட்டது.
கனடிய நாட்டைச் சேர்ந்த ரோட்னி ஹாட்ஜின்ஸ், தம் மனைவியுடன் ஆகஸ்ட் மாத இறுதியில் வான்கூவரிலிருந்து லாஸ் வேகாசுக்குத் தங்கள் திருமண நாளை கொண்டாடுவதற்காக சென்றார்.
மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஹாட்ஜின்ஸ் நடமாடுவதற்காக மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவார் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், லாஸ் வேகாசில் தரையிறங்கியபோது விமானப் பணிப்பெண் ஒருவர் தங்களிடம் சக்கர நாற்காலி இல்லாததால், அவரே தானாகவே விமானத்திலிருந்து இறங்கும்படி ஹாட்ஜின்சிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஹாட்ஜின்சின் மனைவி ஃபேஸ்புக்கில் அக்டோபர் 24ஆம் தேதி பதிவிட்டிருந்தார்.
விமானி, விமானப் பணிப்பெண்கள் யாரும் தாங்கள் விமானத்தை விட்டு வெளியேற உதவி செய்யவில்லை எனவும் இது மனித நேயமற்ற செயல் எனவும் ஹாட்ஜின்சின் மனைவி அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து போதிய உதவி வழங்கப்படாததற்கு ஹாட்ஜின்சிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதாகவும் அவருக்கு 2,000 கனடிய டாலர் (S$1,974) மதிப்புள்ள பற்றுச்சீட்டை வழங்கியதாகவும் ஏர் கனடா விமான நிறுவனம் கூறியது.