போர்கள் குறித்த கருத்து வேறுபாடு ஜி20 கூட்டத்தில் எதிரொலிக்கும் சூழல்

போர்கள் குறித்த கருத்து வேறுபாடு ஜி20 கூட்டத்தில் எதிரொலிக்கும் சூழல்

படம்: ராய்ட்டர்ஸ்

30 Oct 2026 - 9:22 pm

2 mins read

அட்லாண்டா: உலகின் ஆகப்பெரிய 20 பொருளியல் நாடுகளின் (ஜி20) வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் கூட்டம் அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

உக்ரேன் மற்றும் மத்திய கிழக்கு போர்கள் குறித்த கடுமையான கருத்து வேறுபாடுகள், இக்கூட்டத்தில் எடுக்கப்படும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை அல்லது கூட்டறிக்கைகளைத் தடம் புரளச் செய்யக்கூடும் என்று நிபுணர்களும் தூதரக அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

சுழற்சி முறையில் ஜி20 தலைமைப் பொறுப்பை இந்த ஆண்டு அமெரிக்கா ஏற்றுள்ளது.

வர்த்தகச் சமநிலையின்மை, முக்கியமான கனிமங்கள் மீதான சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளக் கூட்டணிகளை உருவாக்குவது ஆகியவற்றின் மீது தனது நட்பு நாடுகளின் கவனத்தைத் திருப்ப அமெரிக்கா முற்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தப் போர்களும் அவற்றால் ஏற்படும் பொருளியல் தாக்கங்களுமே பல ஜி20 உறுப்பு நாடுகளின் முதன்மைக் கவலையாகத் தொடர்கின்றன.

அக்டோபர் 31 வரை இரு நாள்களுக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு தென்னாப்பிரிக்காவை அமெரிக்கா அழைக்கவில்லை.

அதேவேளை, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இதில் கலந்துகொள்வது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

வழக்கமான ஜி20 குழுவினரின் புகைப்படம் எடுப்பதும்கூட சில சங்கடங்களை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது லாவ்ரோவுடன் ஒரு படம், பின்னர் அவர் இல்லாமல் மற்றொன்று என இரண்டு தனித்தனிப் படங்களை எடுக்கலாம் என சில ஐரோப்பிய அதிகாரிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

ஜி20 உறுப்பு நாடுகளான ரஷ்யா, சீனா, பிரேசில், இந்தியா போன்ற பல இடைநிலை ஆதிக்க நாடுகள் அமெரிக்க - சீன உத்திபூர்வப் போட்டியைச் சமாளித்துக் கடக்க முற்படுகின்றன.

இந்நிலையில், “நாம் இதுவரை கண்டிராத அளவுக்குப் பிளவு மிக அதிகமாக உள்ளது,” என்று ஒபாமா நிர்வாகத்தின் போது வெளியுறவுத்துறையில் தலைமைப் பொருளியல் நிபுணராகப் பணியாற்றிய ஹெய்டி கிரெபோ-ரெடிக்கர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்