சைபர்ஜெயா: அதிகாரபூர்வ அரசாங்கப் பணிகளுக்காக ‘வேஸ்’ (Waze) செயலியைப் பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவை மீறும் பொதுச் சேவைத் துறை ஊழியர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
அரசாங்கத் தலைமைச் செயலாளர் ஷம்சூல் அஸ்ரி அபு பகார் பிறப்பித்த அந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் தலைமை இயக்குநர் ராஜா நுஷிர்வான் ஸானல் அபிடின் தெரிவித்தார்.
“உத்தரவு அமலாக்கம் தொடர்பாக ஏற்கெனவே நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பொதுவாக இது, அந்தந்த துறைகளின் தலைவர்களிடமே விட்டுவிடப்படுகிறது. எனினும், அரசாங்கத் தலைமைச் செயலாளர் வழங்கும் அறிவுறுத்தல்களை மீறினால், அது ஒழுங்கு நடவடிக்கைக்கு வழிவகுக்கும்,’’ என்றார் அவர்.
குறிப்பிட்ட அச்செயலியை அலுவலகப் பணிகளுக்காகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று பொதுச் சேவைத் துறை ஊழியர்களுக்கு அவர் வலியுறுத்தினார்.
அதோடு, இருப்பிடத் தரவுகள், நடமாட்டத் தகவல்கள் கசிவதற்கான அபாயத்தைக் குறைக்கும் பொருட்டு, அச்செயலியைத் தங்கள் தொலைத்தொடர்புச் சாதனங்களிலிருந்து நீக்கிவிடுமாறும் ராஜா நுஷிர்வான் கேட்டுக்கொண்டார்.
‘வேஸ்’ செயலியின் பயன்பாடு தொடர்பான இணையப் பாதுகாப்பு அபாயங்களைக் கையாள்வதில் அரசாங்கம் கட்டம்கட்டமாக அணுகுமுறையை மேற்கொள்கிறது.
தொடக்கக் கட்ட நடவடிக்கைகளின் செயல்திறனை மதிப்பீடு செய்த பின்னரே, தொடர் நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும்.
அச்செயலியின் பயன்பாட்டிற்கு முழுமையான தடை விதிக்காமல், தரவுப் பாதுகாப்பு குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதும் அந்த அணுகுமுறையின் நோக்கம் என்று ராஜா நுஷிர்வான் கூறினார்.
“அரசாங்கத்தின் சார்பில் கூறும்போது பாதுகாப்புப் பிரச்சினைகளை மனித உரிமைகள், பேச்சு சுதந்திரம், தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் ஆகியவற்றுடன் நாம் எப்போதும் சமநிலைப்படுத்த வேண்டும். எனவே, நாம் ‘வேஸ்’ செயலியைத் தடை செய்தால், அதன் விளைவாக நாம் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றாகிவிடும்,” என்றார் அவர்.
வியாழக்கிழமை (அக்டோபர் 22) புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தற்போதைய கட்டுப்பாடுகள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்றும் அரசாங்கம் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் இறுதி முடிவை எடுப்பது தனிநபர்களின் பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தியதாக பெர்னாமா தெரிவித்தது.
