ஐ.நா. பல்லுயிர் மாநாட்டில் இயற்கை குறித்து விவாதங்கள்

ஐ.நா. பல்லுயிர் மாநாட்டில் இயற்கை குறித்து விவாதங்கள்

படம்: ராய்ட்டர்ஸ்

19 Oct 2026 - 6:06 pm

2 mins read

லண்டன்: பல்லுயிரிகளின் இழப்பைத் தடுப்பதற்கான மந்தமான முயற்சிகளை மதிப்பிடுவதற்காக உலகத் தலைவர்கள், அரசதந்திரிகள், இயற்கை நிபுணர்கள் ஆகியோர் அர்மேனியாவில் இவ்வாரம் கூடுகிறார்கள்.

பெரும்பாலான அனைத்துலக இலக்குகளை அடைவதில் நாடுகள் பின்தங்கியுள்ளன. மேலும் அதற்கான நிதி ஒதுக்குவதிலும் கருத்து வேறுபாடுகள் நீடிக்கின்றன.

COP17 என அழைக்கப்படும் 17வது ஐ.நா. மாநாடு, குன்மிங்-மாண்ட்ரீல் உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பின் கீழ் நடைபெறும் மதிப்பாய்வு ஆகும்.

2030ஆம் ஆண்டிற்குள் 30 விழுக்காடு நிலம், கடலைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது குன்மிங்-மாண்ட்ரீல் திட்டம்.

2030ஆம் ஆண்டிற்குள் நிலப் பாதுகாப்பில் 27.5 விழுக்காடு அளவை எட்ட வாய்ப்புள்ளது. ஆயினும், பல்லுயிர்களின் இழப்பைத் தடுக்கத் தேவையான பல இலக்குகள் எட்டப்படாமல் உள்ளதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

பூச்சிக்கொல்லி பயன்பாடு முதல் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகள் வரை விவாதிக்கப்படவுள்ளன.

சரியான முடிவுகள் எடுக்காவிட்டால் அது உணவு உற்பத்தி, நீர் பாதுகாப்பு, உலகெங்கிலும் உள்ள பொருளியல் நிலைத்தன்மை ஆகியவற்றை அச்சுறுத்துகிறது.

குன்மிங்-மாண்ட்ரீல் கட்டமைப்பின் 23 இலக்குகளில் 22ஐ அடைவதற்கான பாதையில் நாடுகள் இல்லை என்று கூறப்படுகிறது.

பிரேசில், சீனா உட்பட 144 நாடுகள் செயல் திட்டங்களை உருவாக்கியுள்ளன. S$38.39 பில்லியன் பொது நிதி இலக்கிற்கு யார், எவ்வளவு பணம் செலுத்துகிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அர்மேனியாவில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் நிதி தொடர்பாகவும் பேசப்படவுள்ளது.

தனியார் துறையின் பங்கு குறைவாக இருப்பதால், தனியார் துறை பெரிய பங்காற்றும் எனப் பலர் எதிர்பார்க்கிறார்கள்.

உயிரினங்களின் அழிவைத் தடுக்க அரசாங்கங்களுக்கு நல்ல வாய்ப்பாக இந்தப் பேச்சுவார்த்தை அமையும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்