எரிக்க வேண்டாம், தாள்களை மின்னிலக்க வடிவில் படைக்கலாம்: சீனர்களிடம் தாய்லாந்து

1 mins read
027685e4-89d7-4ac6-8c39-e0622f1fb1a1
ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) மிகவும் புகைமூட்டமாகக் காணப்பட்ட தாய்லாந்துத் தலைநகர் பேங்காக். - படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: தாய்லாந்து, மோசமான காற்றுத் தூய்மைக்கேட்டால் பாதிக்கப்பட்டுள்ளது.

அதனால் சீனப் புத்தாண்டுப் பாரம்பரிய நடவடிக்கைகளில் ஒன்றான பாரம்பரியத் தாள்களை எரிப்பதற்குப் பதிலாக மின்னிலக்கத் தாள்களைப் படையலாக வைக்கலாம் என்று அந்நாட்டு அரசாங்கம் சீனர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. காற்றுத் தூய்மைக்கேட்டைக் குறைக்க உதவ அந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தாள்கள், ஊதுபத்திகள் போன்றவற்றை எரிப்பத்ற்குப் பதிலாக மெய்நிகர், மின்னிலக்கத் தாள்களை எரிப்பது போன்ற இணைய பாவனை நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பில் சீனர்களின் ஒத்துழைப்பை தாய்லாந்து அரசாங்கம் நாடுவதாக அரசாங்க இணைப் பேச்சாளர் அனுக்குல் புருவெக்சானுசாக் தெரிவித்தார்.

காற்றின் தரத்தை மேம்படுத்த அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தலைநகர் பேங்காக் உட்பட பல பெரிய நகரங்கள் அபாயகரமான காற்றுத் தூய்மைக்கேட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திரு அனுக்குல் அதனை வலியுறுத்தினார்.

அதோடு, தாள்களை எரிப்பதும் ஊதுபத்திகளை ஏற்றுவதும் தீ மூளும் அபாயத்தை அதிகரிப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

இவ்வாண்டின் சீனப் புத்தாண்டு வரும் புதன்கிழமை (ஜனவரி 29) தொடங்குகிறது. அதை முன்னிட்டு முன்னோர் வழிபாடு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 28) நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்