சோல்: நண்பரைக் கொலை செய்ய முயன்றதன் தொடர்பில் 20 வயது மதிக்கத்தக்க ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஆடவர் தமது நாயை நண்பர் துன்புறுத்தியதாய்ச் சந்தேகித்ததாகக் கூறப்படுகிறது.
குவாங்ஜு நகரின் குவாங்சான்-கு வட்டாரத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியொன்றில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) மாலை சுமார் 5 மணிக்குச் சம்பவம் நடந்தது. குவாங்சான் காவல் நிலையம் அதுகுறித்த தகவலை வெளியிட்டது.
சந்தேக நபரும் பாதிக்கப்பட்டவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள். கட்டுமான ஊழியர்களாக அவர்கள் தென்கொரியாவில் வேலை செய்தனர். இருவரும் அவ்வப்போது ஒருவர் மற்றவர் வீட்டுக்குச் செல்வதுண்டு.
சந்தேக நபர், தனது வீட்டில் நாய் ரத்தம் சிந்தியதைக் கண்டார். அதற்குக் காரணம் நண்பர்தான் என்று அவர் கருதினார். 50களில் இருந்த நண்பரின் வீட்டுக்குச் சென்ற அவர், வாக்குவாதத்தில் இறங்கினார். பின்னர் நண்பரை அவர் கத்தியால் குத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சந்தேக நபர், சம்பவ இடத்தைவிட்டு உடனே ஓடிவிட்டாலும் இரண்டே மணிநேரத்தில் காவல்துறையிடம் பிடிபட்டார். மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் நண்பரின் உடல்நிலை கவலைக்கிடமாய் இருப்பதாகக் கூறப்பட்டது.
பாதிக்கப்பட்டவர், உண்மையிலேயே நாயைத் துன்புறுத்தினாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.

