இந்தியாவுக்கான நிதி உதவியை நிறுத்திய டோஜ்: ஏன் $21 மில்லியன் நாங்கள் கொடுக்க வேண்டும் என்று டிரம்ப் கேள்வி

இந்தியாவுக்கான நிதி உதவியை நிறுத்திய டோஜ்: ஏன் $21 மில்லியன் நாங்கள் கொடுக்க வேண்டும் என்று டிரம்ப் கேள்வி

1 mins read
7a1fdcbf-c097-4d6a-8c87-e84f6111ece3
டோனல்ட் டிரம்ப் - கோப்புப் படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: ‘டோஜ்’ அமைப்பு, இந்தியாவுக்கான நிதியுதவியை நிறுத்தம் நடவடிக்கையை எடுக்கப் போவதாக பிப்ரவரி 16ஆம் தேதி அறிவித்தது. இந்தியாவில் வாக்காளர்களை ஈர்ப்பதற்கான தேர்தல் மற்றும் அரசியல் நடைமுறைகளை வலுப்படுத்துவதற்காக அந்த நிதி வழங்கப்படுகிறது. ஆனால் இலோன் மஸ்க் தலைமையிலான டோஜ் எனும் அரசாங்க செயல்திறன் பிரிவு அந்த நிதி நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

இத்தகைய நிதி உதவியின் அவசியம் குறித்து கேள்வி எழுப்பிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக வரி ஆகிய காரணங்களால் அமெரிக்க வரி செலுத்துவோரின் பணத்தை ஏன் ஒதுக்க வேண்டும் என்றார்.

“இந்தியாவில் வாக்காளர்களை ஊக்குவிக்க 21 மில்லியன் டாலர் வழங்கப்படுகிறது. நாம் ஏன் அவர்களுக்கு இந்தப் பணத்தைக் கொடுக்கிறோம்,” என்று செய்தியாளர் சந்திப்பின்போது டிரம்ப் கூறினார்.

“இந்தியாவில் நிறைய பணம் இருக்கிறது. உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் அதுவும் ஒன்று. அவர்களின் வரி மிக அதிகமாக இருப்பதால் நாங்கள் அங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவது சிரமம்,” என்றும் அவர் தெரிவித்தார்.

“இந்தியா மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது, பிரதமர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்புதான் இங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஆனால் இந்தியாவில் வாக்களிக்க 21 மில்லியன் டாலர் ஏன் கொடுக்க வேண்டும்,” என்று மேலும் திரு டோனல்ட் டிரம்ப் கூறினார்.

குறிப்புச் சொற்கள்