ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அடைக்கலம் தரும் நிலையத்தைக் கட்டி முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் ஒன் ஹஃபிஸ் காஸி வெளிப்படையாக வருத்தம் தெரிவித்துள்ளார் என்று மலாய் மெயில் செய்தி தெரிவிக்கிறது. ரூமா பெசோனா ஜோகூர் (RPJ) எனும் நிலையத்தைச் சென்ற ஆண்டு கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
ரூமா பெசோனா ஜோகூர், குடும்ப வன்முறைக்கு ஆளான பெண்களுக்குத் தற்காலிகமாக அடைக்கலம் தரும் நோக்குடன் வரையப்பட்ட அரசாங்கத் திட்டமாகும்.
“ரூமா பெசோனா ஜோகூர் திட்டத்துக்கான பணிகளில் தாமதம் ஏற்பட்டதன் தொடர்பில் நான் மிகவும் வருத்தமடைகிறேன்,” என்று திரு ஒன் ஹஃபிஸ் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். அடைக்கலம் தரும் நிலையம் கட்டப்பட்டுவரும் பகுதியை நேரில் சென்றுப் பார்வையிட்ட பிறகு அவர் அவ்வாறு பதிவிட்டார்.
ஜோகூரில் மேற்கொள்ளப்பட்டுவரும் எல்லா திட்டங்களையும் தமது மாநில அரசாங்கம் முக்கியமாகக் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.
“திட்டமிடப்பட்ட காலகட்டத்தில் பணிகள் நடைபெறுவதை உறுதிசெய்யுமாறும் பணிகள் குறித்த விவரங்களை அடிக்கடி மாநில அரசாங்கத்துக்குத் தெரியப்படுத்துமாறும் நான், கட்டுமானப் பணிகளை ஏற்று நடத்தும் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்,” என்று திரு ஒன் ஹஃபிஸ் எடுத்துரைத்தார்.

