சோல்: தென்கொரியாவில் 66 வயது பௌத்த துறவி ஒருவருக்கு, அவரது மனைவியைத் தொடர்ந்து தாக்கி வன்முறையில் ஈடுபட்ட குற்றத்துக்காக ஓராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சோல் மத்திய மாவட்ட நீதிமன்றம், கடுமையாகத் தாக்கியது, மிரட்டியது ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் அந்தத் துறவி குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது.
கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதியன்று துறவி, மதுபோதையில் அந்த மாதின் கழுத்தில் தாக்கியதோடு அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்தார். மேலும், இரண்டு கத்திகளைக் கொண்டும் மாதை மிரட்டினார்.
அந்தத் துறவி இதற்கு முன்னரும் 39 முறை வன்முறை, மிரட்டல் தொடர்பான குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர் ஆவார். அவருக்கு 2005ஆம் ஆண்டு மே மாதம் 14 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஒருமுறை அவரது மனைவி கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் சிறைத்தண்டனை தள்ளிவைக்கப்பட்டது.
“அதே குற்றங்களுக்குப் பலமுறை தண்டனை விதிக்கப்பட்டும் தன்னை மாற்றிக்கொள்ள குற்றவாளி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணை அவர் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்,” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
கடந்த 2022ஆம் ஆண்டில் அந்தத் துறவியை மாது விவாகரத்து செய்திருந்தாலும் இருவரும் ஒரே இடத்தில் வாழ்ந்துவந்துள்ளனர். இம்முறையும் மனைவி முன்னாள் கணவர்மீது கருணை காட்டும்படி நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
அந்தத் துறவியின் தொடர் வன்முறைக் குற்றங்களைக் கருத்தில்கொண்டு, இம்முறை நீதிமன்றம் மனைவியின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
தென்கொரியாவில் சில பௌத்த சமயப் பிரிவுகள் துறவிகள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கின்றன. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டத் துறவி எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்பது வெளியிடப்படவில்லை.

