வாஷிங்டன்: அமெரிக்காவின் 47வது அதிபராக டோனல்ட் டிரம்ப் திங்கட்கிழமை (ஜனவரி 20) பதவியேற்றார்.
திரு டிரம்ப்பின் பதவியேற்பு விழாவில் சீனத் துணை அதிபர் ஹான் ஸெங், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், டெஸ்லா தலைமை நிர்வாகி எலன் மஸ்க், மெட்டா தலைமை நிர்வாகி மார்க் ஸக்கர்பர்க், டிக்டாக் தலைமை நிர்வாகி ஷோவ் ஸி சியு, ஆப்பிள் தலைமை நிர்வாகி டிம் குக், கூகல் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
ஆசியாவின் ஆகப்பெரிய பணக்காரரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் தலைவர் முகேஷ் அம்பானியும் விழாவில் பங்கேற்றார்.
திரு டிரம்ப், 78 வயதில் ஆக வயதான அதிபராகப் பதவியேற்றார். தமது முதல் பதவிக்காலத்தில் (2017-2021) இரண்டு முறை அரசியல் குற்றச்சாட்டை எதிர்நோக்கிய அவர், குற்றவியல் குற்றச்சாட்டுகளுடன் பதவிக்கு வந்த ஒரே அமெரிக்க அதிபராவார்.
இரண்டு கொலை முயற்சிகளிலிருந்து தப்பிய அவருக்கு, நவம்பர் 5 தேர்தலில் அதிபர் மன்ற வாக்குகள் மற்றும் மக்கள் வாக்குகளுடன் வெள்ளை மாளிகைப் பயணத்துக்கு வழிவகை செய்யப்பட்டது.
“அமெரிக்காவின் பொற்காலம் இப்போதே தொடங்குகிறது. இன்று முதல், நமது நாடு செழித்தோங்கி, மீண்டும் உலகம் முழுவதும் மதிக்கப்படும்” என்று திரு டிரம்ப் தமது தொடக்க உரையில் கூறினார்.
திரு டிரம்ப்பின் பதவியேற்பு விழாவில் 46வது அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர்கள், ஜார்ஜ் டபிள்யு. புஷ், பில் கிளின்டன் ஆகியோர் தத்தம் மனைவிகளுடன் பங்கேற்றனர். முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இதில் கலந்துகொண்டாலும், அவரின் மனைவி மிஷல் ஒபாமா அவருடன் வரவில்லை.
இந்நிலையில், திரு டிரம்ப்பின் பதவியேற்புக்கு முன், அமெரிக்காவின் 50வது துணை அதிபராக ஜே.டி. வேன்ஸ் பதவியேற்றார்.