தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டோனல்ட் டிரம்ப்: வரி விதிப்பை நிறுத்த வாய்ப்பில்லை, பேசத் தயார்

2 mins read
93fc96e4-d11b-48d2-8374-a5d3e9daef26
வரிகளுக்கு அப்பாலும் வழிகளை ஆராய்வதால் நியாயமான ஒப்பந்தத்துக்கு பேச்சு நடத்த தயாராக இருப்பதாக டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: உலக நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரியை நிறுத்த வாய்ப்பில்லை என்று கூறியுள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகச் சொன்னார்.

வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவின் நட்பு நாடுகள் உட்பட பல நாடுகள் அமெரிக்க அதிபரைச் சந்தித்துப் பேச முயற்சி எடுத்துள்ளன.

இந்த நிலையில் நாடுகளுடன் பேச்சு நடத்தத் தயார் என்று ஏப்ரல் 7ஆம் தேதி ஒவல் அலுவலகத்தில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவைச் சந்தித்தபோது திரு டிரம்ப் தெரிவித்தார்.

தமது பொருளியல் நிகழ்ச்சி நிரலில் வரி விதிப்பு மிகவும் முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு நாட்டுடனும் சிறந்த, நியாயமான ஒப்பந்தத்திற்கு கதவு திறந்திருக்கிறது என்றார்.

“நிரந்தர வரிகளும் இருக்கும், பேச்சு நடத்தவும் தயாராக இருக்கிறோம். ஏனெனில் வரி விதிப்புக்கு அப்பாலும் வழிகளை ஆராய்கிறோம்,” என்று திரு டிரம்ப் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்கா விதித்துள்ள பத்து விழுக்காடு வரி ஏற்கெனவே நடப்புக்கு வந்துள்ளது. ஏப்ரல் 9ஆம் தேதியிலிருந்து கூடுதல் வரிகள் நடப்புக்கு வரவிருக்கின்றன. இதன் காரணமாக உலகச் சந்தை நிச்சயமற்றதாக உள்ளது. டிரம்ப்பின் அணுகுமுறையால் வெறுப்படைந்துள்ள வெளிநாட்டுத் தலைவர்கள் அமெரிக்காவுடன் பேசி நிலைமையைச் சீராக்க விரும்புகின்றனர்.

டிரம்பைச் சந்தித்த நெட்டன்யாகு, தமது நாடு அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள வர்த்தக ஏற்றத் தாழ்வுகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கூறியுள்ளார்.

அமெரிக்காவுடனான அனைத்து வர்த்தகப் பற்றாக்குறையையும் அகற்றுவோம் என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

அப்போது பேசிய டிரம்ப், இஸ்ரேலை கைவிட மாட்டோம் என்றும் எங்கள் நண்பர்களைக் கவனித்துக் கொள்வோம் என்றும் சொன்னார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கடந்த வாரம் பல நாடுகளுக்கு வரி விதிப்புகளை அறிவித்தார்.

அதன் பிறகு முதல் வெளிநாட்டுத் தலைவராக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு டிரம்பைச் சந்தித்துள்ளார்.

அமெரிக்காவின் வரி விதிப்பு, உலகச் சந்தையில் எதிரொலித்து பொருளியல் மந்தநிலைக்குத் தள்ளப்படும் என்று அஞ்சப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்