ஃபுளோரிடா விமான நிலையத்திற்கு டோனல்ட் டிரம்ப்பின் பெயர்

ஃபுளோரிடா விமான நிலையத்திற்கு டோனல்ட் டிரம்ப்பின் பெயர்

1 mins read
5d7262ea-1eff-49ad-9095-4a86eb823ef1
நியூயார்க்கில் பிறந்தவரான திரு டோனல்ட் டிரம்ப், கடந்த 2019ஆம் ஆண்டு ஃபுளோரிடாவிற்குக் குடிபெயர்ந்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

மயாமி: அமெரிக்காவின் ஃபுளோரிடாவிலுள்ள பால்ம் பீச் அனைத்துலக விமான நிலையத்திற்கு அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் பெயர் சூட்டப்படவிருக்கிறது.

இந்தப் பெயர் மாற்றத்திற்கு ஃபுளோரிடா மாநிலத்தின் குடியரசுக் கட்சி ஆளுநர் ரோன் டிசான்டிஸ் அளித்துள்ளார்.

ஆயினும், பெயர் மாற்றத்திற்கு முன்னர் அதுகுறித்து கூட்டரசு விமானப் போக்குவரத்து நிர்வாகத்திடம் முறைப்படி கோரிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். அவ்வமைப்பு பின்னர் விமான அட்டவணை மற்றும் வழித்தடத் தரவுகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

‘பிபிஐ’ (PBI) எனும் ஃபுளோரிடா விமான நிலையக் குறியீட்டை ‘டிஜேடி’ (DJT) என மாற்றுவது தொடர்பான சட்ட முன்வரைவை பிரையன் மஸ்ட் எனும் பேராளர் கடந்த வாரம் தாக்கல் செய்தார்.

நியூயார்க்கில் பிறந்தவரான திரு டிரம்ப், கடந்த 2019ஆம் ஆண்டு ஃபுளோரிடாவிற்குக் குடிபெயர்ந்தார்.

முன்னதாக, இவ்வாண்டுக் கோடையிலிருந்து அமெரிக்க டாலர் தாளில் அதிபர் டிரம்ப்பின் கையெழுத்து இடம்பெறும் என்று அமெரிக்க நிதியமைச்சு சென்ற வாரம் அறிவித்திருந்தது. நடப்பு அதிபர் ஒருவரின் கையெழுத்து அமெரிக்கப் பணத்தாளில் இடம்பெறுவது இதுவே முதன்முறை.

கடற்படைக் கப்பல்கள், வெளிநாட்டுச் செல்வந்தர்களுக்கான விசா திட்டம், அரசாங்கம் நடத்தும் மருந்து இணையத்தளம், குழந்தைகளுக்கான கூட்டரசு சேமிப்புக் கணக்குகள் ஆகியவற்றிலும் அதிபர் டிரம்ப்பின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்