டிரம்ப் நிர்வாகத்திடம் அடிபணிய வேண்டாம்: கையெழுத்து இயக்கம் நடத்திய ஹார்வர்ட் முன்னாள் மாணவர் அமைப்பு

2 mins read
7888cd79-386e-4a4f-89b2-5097682d1e8f
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை ஆதரிக்கும் வகையில் அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்தில் உள்ள வீடு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பதாகை. - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: பல்கலைக்கழகத்தின் தன்னாட்சியைப் பறிக்க நினைக்கும் டிரம்ப் நிர்வாகத்துடன் எந்தவொரு ஒப்பந்தத்தையும் மேற்கொள்ள வேண்டாம் என ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை அதன் முன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோர் அடங்கிய குழு வலியுறுத்தியுள்ளது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு வழங்கிவந்த பல பில்லியன் அமெரிக்க டாலர் மானியம் உட்பட இதர நிதியுதவியை அமெரிக்க அரசாங்கம் நிறுத்தியது.

அவற்றை மீட்டெடுக்கவும் டிரம்ப் நிர்வாகத்தின் பன்முனைத் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் 500 மில்லியன் அமெரிக்க டாலரை அந்நாட்டு அரசாங்கத்திற்குச் செலுத்த பல்கலைக்கழகம் முன்வந்துள்ளது.

இந்நிலையில், டிரம்ப்பின் அதிகாரத்திற்குப் பல்கலைக்கழக நிர்வாகம் அடிபணியக் கூடாது என்பதை வலியுறுத்திக் கையெழுத்து இயக்கம் ஒன்றை பல்கலைக்கழக முன்னாள் மாணவர் அமைப்பு நடத்தியுள்ளது.

கல்விச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட ஹார்வார்ட் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களின் புதிய குழுவான கிரிம்சன் கரேஜ் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு 14,000க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் கையெழுத்திட்ட கடிதத்தை அனுப்பியது.

அதில், டிரம்ப் நிர்வாகத்துடனான உடன்பாடு ஹார்வர்ட் சமூகத்திலும் உயர்கல்வியிலும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் இருக்கும் தலைசிறந்த உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களைக் குறிவைத்து டிரம்ப் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியது.

அவற்றிற்கு வழங்கப்பட்டு வந்த மானியங்களை முடக்கியது.

இதனால், மிகவும் சிரமத்திற்குள்ளான பல்கலைக்கழகங்கள் சமரசப் பேச்சுவார்த்தையில் இறங்கின.

முடக்கப்பட்ட 400 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மானியங்களை மீட்டெடுப்பதற்காக 200 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான (S$257 மில்லியன்) தொகையை அமெரிக்க அரசாங்கத்திற்குச் செலுத்தும் ஒப்பந்தத்தில் கொலம்பியா பல்கலைக்கழகம் கையெழுத்திட்டுள்ளது.

மேலும், நிறுத்தப்பட்ட நிதியைத் திரும்பப்பெறும் நோக்கிலும் பிற கோரிக்கைகளை நிறைவேற்றவும் அமெரிக்கப் பணியாளர் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலரை வழங்க பிரவுன் பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்