புளோரிடா: சக்திவாய்ந்த ‘ஹெலன்’ புயலால் அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறைந்தது 63ஐ எட்டியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் தெற்கு, கிழக்குப் பகுதிகளில் பலவற்றில் சேதமடைந்த பாலங்களும் குப்பைக்கூளமான சாலைகளும் மீட்புப் படையினருக்குச் சவால் விடுப்பதற்கிடையே, வீடு வீடாகச் சென்று மக்களை உயிருடன் மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புளோரிடா மாநிலத்தில் செப்டம்பர் 26ஆம் தேதி ‘வகை 4’ சூறாவளியாகத் தாக்கிய ‘ஹெலன்’, பின்னர் வலுவிழந்தபோதும் அதன் பாதை நெடுகச் சேதம்.
அலபாமா, புளோரிடா, ஜார்ஜியா, நார்த் கரோலினா, சவுத் கரோலினா, டென்னசி ஆகிய ஆறு மாநிலங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் அதிகாரிகளுக்கு உதவ 800க்கும் மேற்பட்ட அரசாங்க அவசரகால நிர்வாக அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர்.
பழுதுபார்ப்புப் பணியாளர்கள் தங்களது பணியில் செப்டம்பர் 28ஆம் தேதி ஈடுபடத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, சேதம் விளைவித்த வெள்ள நிலவரத்தை அடுத்து நிலைமை இனி தொடர்ந்து மேம்படும் என்று தேசிய வானிலை மையம் குறிப்பிட்டது.
இருப்பினும், நீண்ட நேர மின்சாரத் தடை ஏற்படும் சாத்தியம் உண்டு என்றும் எச்சரித்துள்ளது.
முன்னதாக, செப்டம்பர் 28ஆம் தேதி இரவு நிலவரப்படி, 10 மாநிலங்களில் 2.7 மில்லியனுக்கும் மேற்பட்டோர் மின்சாரமின்றி இருந்ததாகக் கூறப்படுகிறது.

