தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூர் பாருவில் இரட்டை மரணம்

1 mins read
57fff8b0-145c-4e4d-8670-e328b17a381e
ஊழியர்கள் தங்கும் கட்டடத்தில் இந்த இரட்டை மரணம் நடந்துள்ளது. - படம்: ஷியாவ்ஹொங்ஷு

ஜோகூர் பாருவில் உணவகங்களுக்கும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கும் மிகவும் பிரபலமான மவுண்ட் அஸ்டின் பகுதியில் இரண்டு மியன்மார் நாட்டினர் திங்கட்கிழமை (அக்டோபர் 20) இரவு 7.40 மணியளவில் மரணமடைந்தனர்.

அது கொலையோடு சம்பந்தப்பட்ட உயிர்மாய்ப்புச் சம்பவம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மாண்ட 33 வயது மாதின் உடலில் கத்திக்குத்துக் காயங்கள் காணப்பட்டன. இந்த விவரங்களை ஜோகூர் பாரு தெற்கு வட்டார காவல்துறை தலைவர் ரவுப் செலாமாட் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

பல சில்லறை வர்த்தகர்கள் நிறைந்துள்ள பகுதியில் ஜாலான் ஹைட்ஸ் 8/3 என்ற முகவரியில் ஊழியர்கள் தங்கும் இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கொலை செய்ததாக நம்பப்படும் மியன்மார் நாட்டு ஆடவர், சம்பவ இடத்தில் 24 சென்டிமீட்டர் நீளக் கத்தியுடன் இறந்த நிலையில் காணப்பட்டார். அவர் அந்த மாதின் காதலர் என்று நம்பப்படுகிறது. அவர் குற்றத்தைப் புரிந்தபிறகு, தன்னையே கத்தியால் குத்திக்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டதாக நம்பப்படுகிறது என்று ‘த ஸ்டார்’ மலேசிய நாளிதழ் தெரிவித்துள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்த 23 வயது வெளிநாட்டு பெண்ணும் 27 வயது மலேசிய ஆடவரும் தாக்குதலைத் தடுக்க முயன்று காயமடைந்தனர். அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். கொலைக்கான காரணத்தை அறிய விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்