வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள திரு டோனல்ட் டிரம்ப், அடுத்து அமையவிருக்கும் தமது நிர்வாகத்துக்கான துறைத் தலைவர்களை நியமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அந்த வகையில், தொலைக்காட்சியில் புகழ்பெற்ற டாக்டர் மெஹ்மெட் ஆஸ் (Mehmet Oz), மெடிகேர், மெடிக்எய்ட் ஆகிய அரசாங்க மருத்துவக் காப்புறுதிச் சேவைகள் அமைப்பின் (சிஎம்எஸ்) தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
சிஎம்எஸ் அமைப்பு 1.7 டிரில்லியன் அமெரிக்க டாலர் (S$2.2 டிரில்லியன்) மதிப்பிலான தொகையை ஒவ்வோர் ஆண்டும் செலவிடுகிறது. அமெரிக்கர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினரின் காப்பீட்டுக்கு அரசாங்கம் இவ்வாறு செலவிடுகிறது.
“அமெரிக்கா சுகாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. இவ்வேளையில் அமெரிக்காவை மீண்டும் உடல்நலமுள்ள நாடாக மாற்றுவதற்கு டாக்டர் ஆஸைவிடச் சிறந்த மருத்துவர் யாரும் இல்லை,” என்று திரு டிரம்ப் நவம்பர் 19ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
டாக்டர் ஆஸ், திரு ராபர்ட் எஃப்.கென்னடி ஜூனியருடன் அணுக்கமாகப் பணியாற்றுவார் என்றும் திரு டிரம்ப் கூறினார்.
இவர், கொவிட்-19 கிருமிப் பரவல் நெருக்கடியின்போது திரு டிரம்ப்புக்கு அதிகாரபூர்வமற்ற ஆலோசகராகச் செயல்பட்டவர்.
டாக்டர் ஆஸ், இந்தப் பதவியை ஏற்பது உறுதியானால், அமெரிக்காவின் சுகாதாரப் பராமரிப்புக் கொள்கை நடைமுறையில் அவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அரசாங்க மருத்துவக் காப்புறுதித் திட்டங்கள், மில்லியன்கணக்கான முதிய அமெரிக்கர்களுக்கும் ஏழைகளுக்கும் காப்புறுதி வழங்குகின்றன.
மெடிகேர் திட்டம் 67 மில்லியனுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள், உடற்குறையுள்ளோருக்குக் காப்புறுதி வழங்குகிறது. மெடிக்எய்ட் திட்டம் குறைந்த வருமான அமெரிக்கர்கள் ஏறக்குறைய 80 மில்லியன் பேருக்குக் காப்புறுதி வழங்குகிறது.