தாய்லாந்தில் சூதாட்டக் கூடங்களை சட்டபூர்வமாக்கும் நகல் சட்டத்துக்கு ஒப்புதல்

1 mins read
5f95948d-8dc7-40bc-a19c-be60cc6a68c3
தாய்லாந்துப் பிரதமர் பெய்த்தொங்தார்ன் ‌ஷினவாத் நகல் சட்டம் குறித்து அறிவித்தார். - படம்: அன்ஸ்பிளா‌ஷ்

பேங்காக்: தாய்லாந்தில் சூதாட்டத்தையும் சூதாட்டக் கூடங்களையும் சட்டபூர்வமாக்க வகைசெய்யும் நகல் சட்டத்துக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தாய்லாந்துப் பிரதமர் பெய்த்தொங்தார்ன் ‌ஷினவத்ர திங்கட்கிழமையன்று (ஜனவரி 13) அதனைத் தெரிவித்தார். சுற்றுப்பயணத் துறைக்கு மெருகூட்டுவது, வேலை வாய்ப்புகள், முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கும் முயற்சி எடுக்கப்படுகிறது.

நன்கு ஆலோசிப்பதற்காக நகல் சட்டம் நாடாளுமன்றத்திடம் சமர்ப்பிக்கப்படும். சட்டம் அமல்படுத்தப்பட்டால் அது பெரிய கேளிக்கை நிலையங்களில் சூதாட்டம் இடம்பெற வழிவகுக்கும்.

தாய்லாந்தில் சூதாட்டக் கூடங்கள், பெரும்பாலான சூதாட்ட நடவடிக்கைகள் ஆகியவை சட்டவிரோதமானவை. எனினும், காற்பந்துப் பந்தயப் பிடிப்பு, சட்டவிரோதமாக ரகசியமாக நடக்கும் சூதாட்ட விளையாட்டுகள் ஆகியவை அந்நாட்டில் அதிகம் இடம்பெற்று வருகின்றன. அவற்றில் பெரிய அளவில் பணம் கைமாறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலவகை சூதாட்ட நடவடிக்கைகளுக்கு மட்டுமே தாய்லாந்தில் அனுமதி உள்ளது. அரசாங்கக் கட்டுப்பாட்டில் நடக்கும் குதிரையோட்டப் பந்தயப் பிடிப்பு, அதிகாரபூர்வமாக நடக்கும் லாட்டரி பந்தயப் பிடிப்பு ஆகியவை அவற்றில் அடங்கும்.

தாய்லாந்தின் அண்டை நாடுகளான கம்போடியா, சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ், லாவோஸ், மியன்மார் ஆகியவை பெரிய சூதாட்டக் கூடங்களை நடத்துவதன் மூலம் பயனடைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சட்டபூர்வமான சூதாட்டக் கூடங்கள் இல்லாதது தாய்லாந்து ஈட்டக்கூடிய வருவாய்க்கு இடையூறாக இருக்கிறது என்பதும் அது சுற்றுப்பயணத் துறை மேலும் வளரவிடாமல் செய்கிறது என்பதும் அந்நாட்டு அரசாங்கத்தின் வாதங்கள்.

குறிப்புச் சொற்கள்