இளையர்களின் உந்துதலால் உருவான தேர்தலுக்குத் தயாராகிறது பங்ளாதே‌‌ஷ்

இளையர்களின் உந்துதலால் உருவான தேர்தலுக்குத் தயாராகிறது பங்ளாதே‌‌ஷ்

2 mins read
fe4cfc03-2652-4d62-84f6-57c5d9e853ad
பங்ளாதே‌‌ஷ் தேசியவாதக் கட்சித் தலைவர் தாரிக் ரஹ்மான் (முன்வரிசையில் இடம்) டாக்காவில் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசுவதற்காக அமர்ந்திருக்கிறார். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

டாக்கா: பங்ளாதே‌ஷின் முன்னாள் பிரதமர் ‌ஷேக் ஹசினா ஆட்சி செய்த காலத்தில், தேர்தலின்போது நாட்டின் எதிர்க்கட்சிகளைச் சாலைகளில் காண்பது அரிது. ஒன்று அவை தேர்தலைப் புறக்கணித்துவிடும் அல்லது அவற்றின் மூத்த தலைவர்கள் பலர் கைதுசெய்யப்படுவர். ஆனால் இப்போது நிலைமை வேறு.

பங்ளாதே‌ஷில் வரும் வியாழக்கிழமை (பிப்ரவரி 12) தேர்தல்.

திருவாட்டி ஹசினாவின் அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு அவரின் ஆட்சிக்கு எதிராக நாடு முழுதும் போராட்டம் நடந்தது. அதில் அதிக எண்ணிகையில் பங்கெடுத்த இளைஞர்கள் ஆட்சியைக் கவிழ்த்தனர். இந்நிலையில் அங்கு இப்போது தேர்தல் நடைபெறவிருக்கிறது. 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு பங்ளாதே‌ஷில் போட்டி நிலவப்போகும் முதல் தேர்தல் அது என்று இளைஞர்கள் பலரும் கூறுகின்றனர். அந்த ஆண்டிலிருந்து திருவாட்டி ஹசினா 15 ஆண்டுக்கு நாட்டை ஆட்சி செய்தார்.

தேர்தலில் பங்ளாதே‌‌ஷ் தேசியவாதக் கட்சி வெற்றிபெறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி அதற்குக் கடும் போட்டி கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. 30 வயதுக்கும் குறைவான இளையர்கள் தொடங்கியுள்ள புதிய கட்சி, ஜமாத்துடன் கைகோத்துள்ளது.

பங்ளாதே‌‌ஷ் தேசியவாதக் கட்சித் தலைவர் தாரிக் ரஹ்மான், அரசாங்கத்தை அமைக்கத் தேவையான இடங்களை வென்றுவிட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அந்தக் கட்சி, நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 300 இடங்களில் 292ல் போட்டியிடுகிறது.

வரவிருக்கும் தேர்தல், 175 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நாட்டில், தெளிவான முடிவைக் கொடுப்பது முக்கியம் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். திருவாட்டி ஹசினா பதவியிலிருந்து அகற்றப்பட்ட பிறகு, பங்ளாதே‌ஷில் பல மாதங்கள் குழப்பம் நீடித்தது. துணிமணிகள் உட்பட பெரிய தொழில்துறைகள் பாதிக்கப்பட்டன. உலகில் ஆக அளவு துணிமணிகளை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இரண்டாம் நிலையில் உள்ளது பங்ளாதே‌‌ஷ்.

தேர்தல் முடிவு பங்ளாதே‌ஷில் வட்டாரத்தின் முக்கிய நாடுகளான சீனா, இந்தியா ஆகியவற்றின் பங்கையும் பாதிக்கும் என்று கருதப்படுகிறது.

“பங்ளாதே‌‌ஷ் தேசியவாதக் கட்சி தேர்தலில் வெற்றிபெறும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஆனால் வாக்காளர்களில் கணிசமானோர் இன்னும் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவுசெய்யவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்,” என்று டாக்காவில் உள்ள அரசாங்க ஆய்வு நிலையத்தின் நிர்வாக இயக்குநர் பர்வேஸ் கரிம் அபாஸி கூறினார்.

குறிப்புச் சொற்கள்