கோலாலம்பூர்: ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்குவோர் உட்பட, நாடு தழுவிய அளவில் மொத்தம் 1,176 வாகன ஓட்டுநர்களுக்கான பற்றாக்குறையைச் மலேசியச் சுகாதார அமைச்சு எதிர்கொண்டு வருகிறது.
இந்த இடங்களுக்கான காலியிடங்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை தொடரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பொதுச் சேவை ஊதிய முறையை அமல்படுத்துவதை எளிதாக்கும் வகையில், பொதுச் சேவை ஆணையத்தின் மூலமான ஆட்சேர்ப்புப் பணிகளைப் பொதுச் சேவைத் துறை 2024ஆம் ஆண்டில் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
இதன் காரணமாகப் பொதுச் சேவை உதவியாளர்கள் (ஓட்டுநர்) நியமனத்தில் ஏற்பட்ட தாமதமே இந்தத் தட்டுப்பாட்டிற்குக் காரணம் என்று சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியதாக மலேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.
புதிய ஊதிய முறை நடைமுறையின்கீழ், முன்னர் தனியாக இருந்த வாகன ஓட்டுநர் முறைமை புதிய பொதுச் சேவை உதவியாளர் திட்டத்துடன் இணைக்கப்பட்டது. இதனால், குறிப்பாக ஆம்புலன்ஸ் வாகனங்களை ஓட்டும் பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்களுக்கான ஆட்சேர்ப்புத் தகுதிகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.
பொதுச் சேவை ஆணையத்தின் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் நிறைவடைவதைப் பொறுத்து, பொதுச் சுகாதார மையங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்கள் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் படிப்படியாக நிரப்பப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
சுகாதார அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி, அமைச்சிடம் மொத்தம் 8,863 பொதுச் சேவை உதவியாளர் (ஓட்டுநர்) பணியிடங்கள் இருந்தன. அவற்றில் 7,687 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.
