பேராக்: மலேசியாவில் ஒன்பது மத்திய கலகத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளின் மரணத்துக்குக் காரணமான 45 வயது லாரி ஓட்டுநர் மீது தெலுக் இந்தான் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (மே 16) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மே 13ஆம் தேதி ஓட்டுநர் லாரியை ஆபத்தான முறையில் ஓட்டியதில் ஒன்பது அதிகாரிகள் பலியாயினர்.
ஹிலிர் பேராக்கின் கம்போங் கோட்டாவைச் சேர்ந்த ருடி ஸுல்கர்னைன் மட் ராடி என்ற ஆடவர் தம்மீது சுமத்தப்பட்ட ஒன்பது குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.
44 வயது திரு எஸ் பெருமாள், 46 வயது திரு முகமது ரொஸ்லான் அப்துல் ரஹிம், 41 அயது திரு முகமது பொஸ்லி ஜாவுடின், 34 வயது திரு நுரிட் பான்டாக், 38 வயது திரு அமிருடின் சப்ரி, 38 வயது திரு முகமது ஹில்மி முகமது அஸ்லான் உள்ளிட்டோர் விபத்தில் மாண்டனர்.
மே 13ஆம் தேதி காலை 9 மணியளவில் ஹிலிர் பேராக்கில் உள்ள ஜாலான் சுங்காய் மனிக் என்ற இடத்தில் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ருடிக்கு ஐந்தாண்டிலிருந்து 10 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் அதிகபட்சம் 50,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம். அதோடு குறைந்தது ஐந்தாண்டுக்கு வாகனம் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும்.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 10,000 ரிங்கிட் என்ற பிணையில் ருடியை விடுவிக்க அரசாங்க வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். அதோடு வழக்கு முடியும் வரை அவரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் வாரந்தோறும் குற்றஞ்சாட்டப்பட்டவர் காவல்நிலையத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் ஒற்றையராக இருக்கும் ருடியின் மாதாந்தர வருமானம் 2,000 ரிங்கிட்டுக்கும் குறைவாக இருப்பதாலும் அவருக்கு ஆஸ்துமா நோய் இருப்பதாலும் குறைந்தபட்ச பிணையில் அவரை விடுவிக்கும்படி ருடியைப் பிரதிநிதிக்கும் தேசிய சட்ட உதவு அடித்தள அமைப்பின் வழக்கறிஞர் ஃபிரான்கைஸ் சின்னப்பன் கேட்டுக்கொண்டார்.
அதையடுத்து நீதிமன்றம் 6,000 ரிங்கிட் பிணையில் அவரை விடுவிக்க உத்தரவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
வழக்கு விசாரணை அடுத்து ஜூன் 17ஆம் தேதி இடம்பெறும்.
ஈப்போவின் சுங்காய் செனமைச் சேர்ந்த 18 மத்திய கலகத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளைக் கொண்டிருந்த வாகனம் எதிர்த்தடத்தில் வந்த லாரிமீது மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் எட்டு அதிகாரிகள் சம்பவ இடத்தில் மாண்டனர். தெலுக் இந்தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மற்றோர் அதிகாரி சிகிச்சை பலனின்றி இறந்தார். ஒன்பது பேர் படுகாயமடைந்தனர்.
தெலுக் இந்தானில் நடைபெற்ற சித்ரா பெளர்ணமி திருவிழா முடிந்து ஆறு மத்திய கலகத்தடுப்புப் பிரிவு வாகனங்களுடன் விபத்துக்குள்ளான வாகனம் ஈப்போவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து நேர்ந்தது.