கீவ்: ரஷ்யாவின் ஆளில்லா வானூர்திகள், வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) காலையில் சில இடங்களைத் தாக்கியுள்ளதில் குறைந்தது 19 பேர் காயமடைந்தனர். அத்துடன், பல்வேறு கட்டடங்கள் சேதமடைந்திருப்பதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதலில் இதுவரை நால்வர் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் குறிப்பிடுகின்றன. அத்துடன் குறைந்தது 19 பேர் காயமுற்றதாகவும் அவர் கூறினார். காயமடைந்தோரில் 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
உயிரிழந்தோரில் ஒருவர், அவசரகால மருத்துவ உதவியாளர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது குழுவைச் சேர்ந்த நால்வர், அதே சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
டினிப்ரோ ஆற்றின் கிழக்குக் கரையில் இரண்டு கட்டடங்களும் தாக்கப்பட்டதாக அவர் கூறினார். ஒரு கட்டடத்தின் மொத்த நுழைவாயில் சேதமடைந்துள்ளது.
இந்தத் தாக்குதலால் முக்கியமான உட்கட்டமைப்பு சேதமடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. அத்துடன், கடைத்தொகுதி ஒன்றிலும் கீவ் நகரத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீச்சம்பவங்கள் நேர்ந்தன.
இதற்கிடையே, நேட்டோ உறுப்புநாடுகளின் ராணுவப் படைகள் உக்ரேனுக்கு அனுப்பப்படுவதை ரஷ்யா பொறுத்துக்கொள்ளாது என எச்சரித்துள்ளது.
அத்தகைய படைகளையும் அவற்றின் வசதிகளையும் குறிவைப்பதற்கு ரஷ்யப் படைகளுக்கு உரிமை இருப்பதாக ரஷ்யாவின் வெளியுறவுப் பேச்சாளர் மரியா ஸகரோவா மிரட்டல் விடுத்துள்ளார்.

