ஷா ஆலம்: சிலாங்கூர் மாநில அரசு, வழிபாட்டுத் தலங்களைக் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்துவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. இதில் சம்பந்தப்பட்டவர்களின் சமயம், இனம், பின்னணி எதுவாக இருந்தாலும் இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மனிதவள, வறுமை ஒழிப்பு குழுத் தலைவர் வி. பப்பராயுடு, கிள்ளானில் உள்ள பதிவு செய்யப்படாத வழிபாட்டுத் தலம் ஒன்றில், அக்டோபர் 13 முதல் 19ஆம் தேதி வரை சிலாங்கூர் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையினர் நடத்திய நடவடிக்கையின்போது போதைப்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகளைத் தாம் கடுமையாகப் பார்ப்பதாகத் தெரிவித்தார்.
“வழிபாட்டுத் தலங்கள் மதிக்கப்பட வேண்டியவை, அவை புனிதமானவையாக இருக்க வேண்டும், அங்கு வருபவர்களுக்கு அமைதியை வழங்க வேண்டும். மாறாக, அவற்றைத் தடைசெய்யப்பட்ட பொருள்களைச் சேமித்து வைப்பதற்கோ அல்லது குற்றச் செயல்களுக்குத் துணை புரிவதற்கோ பயன்படுத்தக் கூடாது,” என்று அவர் திங்கட்கிழமை (அக்டோபர் 26) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பௌத்த, கிறிஸ்தவ, இந்து, சீக்கிய, தாவோயிச விவகாரங்களுக்கான சிறப்புக்குழுவின் இணைத் தலைவருமான திரு பப்பராயுடு, வழிபாட்டுத் தலங்களைக் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று வலியுறுத்தினார்.
“இருப்பினும், தனிநபர்களின் குற்றச் செயல்களுக்கும், அவர்கள் சார்ந்திருக்கும் சமய நிறுவனங்களுக்கும் சமூகங்களுக்கும் இடையே நாம் வேறுபாடு காண வேண்டும். ஒரு சில தனிநபர்களின் செயல்களைக் காரணம் காட்டி, ஒட்டுமொத்த சமயச் சமூகத்தையே இழிவுபடுத்துவதோ அல்லது களங்கப்படுத்துவதோ கூடாது,” என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்திற்கும் சமயம் அல்லது இனத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் இது சட்டத்தின் ஆட்சி, பொதுப் பாதுகாப்பு, வழிபாட்டுத் தலங்களின் புனிதத்தன்மைக்கு மதிப்பளிப்பது தொடர்பான விஷயம் என்றும் அவர் கூறினார்.
“குற்றச் செயல்களைக் கையாளும்போது, ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீதான உணர்ச்சிகளுக்கோ அல்லது பாரபட்சங்களுக்கோ இடமளிக்கக் கூடாது. மாறாக, ஆதாரங்களின் அடிப்படையிலும் சட்டப்படியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார். மேலும், காவல்துறை முழுமையான விசாரணை நடத்தி, இதில் தொடர்புடையவர்கள்மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதற்குத் தமது ஆதரவையும் அவர் வெளிப்படுத்தினார்.
