போதைப்பொருள் கடத்தல்: சிங்கப்பூரருக்கு 30 ஆண்டு சிறை

போதைப்பொருள் கடத்தல்: சிங்கப்பூரருக்கு 30 ஆண்டு சிறை

படம்: பிக்சாபே

05 Nov 2026 - 7:21 pm

2 mins read

ஷா அலாம்: நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 767.6 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளைக் கடத்திய குற்றத்துக்காக, சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடவர் ஒருவருக்கு மலேசிய உயர் நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட லிம் யீ செங் தாம் குற்றமற்றவர் என்பதற்கான நியாயமான எந்தவொரு சந்தேகத்தையும் எழுப்பத் தவறிவிட்டார் என்று நீதிபதி ரோசியானாயாத்தி அகமது தீர்ப்பளித்தார்.

அத்துடன், லிம்முக்கு 12 பிரம்படியும் விதிக்கப்பட்டது. லிம்மின் சிறைத் தண்டனையானது, அவர் கைது செய்யப்பட்ட நாளான 2022ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதியிலிருந்து கணக்கிடப்படும்.

வழக்கில் மரண தண்டனை விதிப்பதற்குப் பதிலாக, சிறைத் தண்டனையே மிகவும் பொருத்தமானது என்று நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக நீதிபதி ரோசியானாயாத்தி தெரிவித்தார். மேலும், “தண்டனைக் காலத்தை நிறைவு செய்த பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் மீண்டும் தமது குடும்பத்துடன் இணைந்து சமூகத்திற்குத் திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிப்பாங்கில் உள்ள ஜாலான் வாரிசான் சென்ட்ரல் 1ல் அமைந்துள்ள ஹோட்டல் 99ல் லிம் இக்குற்றத்தைச் செய்தார்.

தமது தரப்பு வாதத்தில், செங் மெங் கோக் என்றழைக்கப்படும் ஒருவரே போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்ட காரை ஓட்டிச் சென்றதாக லிம் கூறினார்.

இருப்பினும், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வழக்கை முன்வைத்தபோது இந்த விவகாரம் எழுப்பப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டவரின் இந்த விளக்கம் பின்னர் யோசித்துச் ஜோடிக்கப்பட்ட ஒன்றாகவே தாம் கருதுவதாகவும் நீதிபதி ரோசியானாயாத்தி தெரிவித்தார்.

இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த உள்ளூர் ஒப்பந்ததாரரான மு சாவ் யோங் என்பவரை, இதே நீதிமன்றம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்