பேங்காக்: தாய்லாந்தின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் விமான நிலைய அதிகாரிகளும் கலந்துகொள்ளும் அவசரக் கூட்டத்திற்கு அந்நாட்டுப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராக்குல் அழைப்பு விடுத்துள்ளார்.
தாய்லாந்துடன் தொடர்புடைய இரு ஆஸ்திரேலிய போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அனைத்துலக அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதே இதற்குக் காரணம்.
அதிகாரத்துவப் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் அனுட்டின், போதைப்பொருள் கடத்தலால் நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாக அதிருப்தி தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (ஜூலை 3) பிற்பகலில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், விமான நிலையப் பாதுகாப்பு, சுங்கத்துறை, போதைப்பொருள் தடுப்பு அமைப்புகள் ஆகியவை பங்கேற்கவுள்ளன.
கடந்த ஜூன் 25ஆம் தேதி மெல்பர்ன் விமான நிலையத்தில் ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெராயின் போதைப்பொருளைப் பைகளுக்குள் மறைத்து எடுத்துச் சென்றதாகக் கூறி, தாய்லாந்து ஏர்வேஸ் நிறுவனத்தின் 26 வயது பெண் ஊழியர் ஒருவர் பிடிபட்டார்.
அவர்மீது இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால், ஒவ்வொன்றிற்கும் 25 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
அதுபோல, தாய்லாந்திலிருந்து பெர்த் விமான நிலையத்தைச் சென்றடைந்த 31 வயது பிரெஞ்சுப் பெண் ஒருவரும் போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின்பேரில் சிக்கினார்.
தாய்லாந்தை இந்த வட்டாரத்தின் முதன்மையான விமானப் போக்குவரத்து மையமாக மாற்றவும், 2028ஆம் ஆண்டிற்குள் பொருளியல் கூட்டமைப்பு, மேம்பாட்டு அமைப்பில் (ஓஇசிடி) இணையவும் அந்நாட்டு அரசு தீவிரமாக முயன்று வருகிறது.
இத்தகைய சூழலில், அனைத்துலகக் குற்றக் கும்பல்கள் தாய்லாந்து வான்வழிகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது நாட்டின் நம்பகத்தன்மையைக் கெடுக்கும் எனச் சொல்லப்படுகிறது. அதனையடுத்து, சுவர்ணபூமி உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் சோதனைகளைத் தீவிரப்படுத்துவது குறித்தும் உளவுத் தகவல்களைப் பகிர்வதை வலுப்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது.

