வடிகால் கட்டமைப்புத் திட்டத்திற்கு $11 பில்லியன் செலவிடும் துபாய்

வடிகால் கட்டமைப்புத் திட்டத்திற்கு $11 பில்லியன் செலவிடும் துபாய்

1 mins read
fad1b7b2-7694-4762-8e0c-d372ecb1ea14
வடிகால் கட்டமைப்புப் பணிகளை 2033ல் நிறைவுசெய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

துபாய்: துபாய் அரசாங்கம் 30 பில்லியன் திர்ஹாம் (S$11 பில்லியன்) செலவில் வடிகால் கட்டமைப்பை உருவாக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் கனமழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளத்தால் நகரின் இயல்பு வாழ்க்கை நிலைகுத்திப்போனதை அடுத்து வடிகால் கட்டமைப்புக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் மழைப்பொழிவைப் பதிவுசெய்யும் முறை 1949ல் தொடங்கியது. அதுமுதல் ஆக அதிகமாகப் பெய்ததாகக் கூறப்பட்ட கனமழை, துபாய் உள்கட்டமைப்பு மோசமான நிலையில் இருப்பதை உணர்த்தியது.

எதிர்பாராத வானிலைச் சம்பவங்களைக் கையாள துபாய் தயார்நிலையில் இல்லை என்பதை அது காட்டியது.

வெள்ளத்தால் பல மில்லியன் டாலர் மதிப்பிலான சேதம் ஏற்பட்டது. கட்டடங்களும் வாகனங்களும் சேதமடைந்ததுடன் வர்த்தகச் செயல்பாடுகளும் விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டன.

புதிதாகக் கட்டப்படும் வடிகால் கட்டமைப்பு, மழைநீர் வடிகால் திறனை எட்டு மடங்கு அதிகரிக்கும் என்றும் வருங்காலத்தில் ஏற்படக்கூடிய பருவநிலை மாற்றச் சம்பவங்களைக் கையாள்வதற்கான தயார்நிலையை மேம்படுத்தும் என்றும் துபாய் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தும் கூறினார்.

வடிகால் கட்டமைப்புத் திட்டத்தை அறிவித்து வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

துபாயின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாளொன்றுக்கு 20 மில்லியன் கன மீட்டர் (ஒரு கன மீட்டர் 1,000 லிட்டருக்குச் சமம்) நீரை வெளியேற்றப் புதிய கட்டமைப்பு வழிவகுக்கும். கட்டங்கட்டமாக மேற்கொள்ளப்படும் அதன் கட்டுமானப் பணி 2033ல் நிறைவடையும் என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்