ஜேஜு ஏர் விபத்து: இயந்திரங்களில் வாத்து மரபணுக் கூறுகள்

1 mins read
a2c0ea32-eb51-4a4f-8447-ad7198d10452
கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதியன்று ஜேஜு ஏர் பயணிகள் விமானம் தென்கொரியாவின் முவான் அனைத்துலக விமான நிலய்த்தில் விபத்துக்குள்ளானது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் தென்கொரியாவில் பலரைப் பலிவாங்கிய விபத்தில் சிக்கிய ஜேஜு ஏர் விமானத்தின் இரண்டு ‘எஞ்சின்’ இயந்திரங்களிலும் வாத்தின் மரபணுக் கூறுகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை (ஜனவரி 27) வெளியிடப்பட்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையில் அத்தகவல் இடம்பெற்றுள்ளது. தென்கொரியாவில் நிகழ்ந்துள்ள ஆக மோசமான விமான விபத்தாக வகைப்படுத்தப்பட்டுள்ள அவ்விபத்துக்குப் பின்னால் உள்ள காரணத்தை அறியும் முயற்சியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவம் நேர்ந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு தென்கொரிய அதிகாரிகள் அந்த அறிக்கையை வெளியிட்டனர். விபத்துக்குள்ளான அந்த போயிங் 737-800 ரக விமானத்தின் இரு ‘எஞ்சின்’ இயந்திரங்களிலும் ‘பய்க்கல் டீல்’ (Baikal Teal) வகை வாத்தின் மரபணுக் கூறுகள் இருந்தது ஆறு பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பறவைகள் பொதுவாக குளிர்காலத்தில் அதிக எண்ணிக்கையில் தென்கொரியாவுக்குப் பறந்து செல்லும்.

எனினும், தரையிரங்குவதற்கான முறைகள் செயல்படுத்தப்படாமல் சம்பந்தப்பட்ட ஜேஜு ஏர் விமானம் தரையிறங்கியதற்கான காரணங்கள் குறித்த விவரங்கள் அறிக்கையில் இடம்பெறவில்லை. விமானம் செயல்பாட்டில் இருந்த கடைசி நான்கு நிமிடங்களில் விமானத் தரவு சேகரிப்புக் கருவிகளில் எதுவும் பதிவாகாததற்கான காரணங்களும் இன்னும் தெரியவில்லை.

குறிப்புச் சொற்கள்