சீனாவின் விசா விலக்குக் கொள்கையால், அந்நாட்டிற்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகரிப்பு

சீனாவின் விசா விலக்குக் கொள்கையால், அந்நாட்டிற்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகரிப்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Oct 2026 - 3:59 pm

2 mins read

பெய்ஜிங்: சீனாவின் தேசிய குடிநுழைவு நிர்வாகத்தின் தகவல்படி, மூன்றாம் காலாண்டில் சீனாவுக்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதில் விசா இல்லாமலேயே வருகை தந்தவர்களின் எண்ணிக்கை 8.99 மில்லியனை எட்டியுள்ளது.

அக்டோபர் 20ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தேசிய குடிநுழைவு நிர்வாகத்தின் பேச்சாளர் லியு நிங், “ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் சீனாவுக்குள் மற்றும் வெளியே மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை 192 மில்லியனாக இருந்ததாகவும், இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தை விட 7.4 விழுக்காடு அதிகம்,” என்றும் தெரிவித்தார்.

இந்த மொத்த எண்ணிக்கையில், சீன நிலப்பரப்பில் வசிப்பவர்கள் 95.96 மில்லியன் பயணங்களையும், ஹாங்காங், மக்காவ், தைவான் பகுதியைச் சேர்ந்தவர்கள் 73.14 மில்லியன் பயணங்களையும், வெளிநாட்டினர் 23.27 மில்லியன் பயணங்களையும் மேற்கொண்டனர். இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் முறையே 7.4 விழுக்காடு, 6.4 விழுக்காடு, 15.6 விழுக்காடு அதிகரிப்பாகும்.

சீனர்களுக்கும் வெளிநாட்டினருக்கும் இடையிலான பரிமாற்றங்களை எளிதாக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட, விசா இல்லாத பயணம் போன்ற நடவடிக்கைகள், எல்லை தாண்டிய பயணங்களை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரிக்க உதவியுள்ளன என்று லியு தெரிவித்தார்.

இந்தக் காலகட்டத்தில், வெளிநாட்டினர் சீனாவுக்கு 11.6 மில்லியன் பயணங்களை மேற்கொண்டனர். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 15.6 விழுக்காடு அதிகம்.

சீனாவுக்கு வருகை தந்த வெளிநாட்டினரில் 77.5 விழுக்காட்டினர் விசா இன்றி வந்தவர்கள் ஆவர். இது முந்தைய ஆண்டை விட 24.1 விழுக்காட்டுப் புள்ளிகள் அதிகம்.

ரஷ்யா, தென் கொரியா, வியட்னாம், மலேசியா, அமெரிக்கா, மங்கோலியா, ஜப்பான், சிங்கப்பூர், தாய்லாந்து, ஆஸ்திரேலியா ஆகியவை, சீனாவுக்கு வந்த வெளிநாட்டினர் அதிகம் வந்த முதல் 10 நாடுகளாக இருந்தன.

இதற்கிடையே, மூன்றாம் காலாண்டில் சீனப் பெருநிலத்தில் வசிப்பவர்கள் 48.5 மில்லியன் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டனர். இது முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 7.5 விழுக்காடு அதிகரிப்பு.

தேசிய குடிநுழைவு நிர்வாகத்தின் தகவல்படி, அவர்கள் அதிகம் சென்ற முதல் 10 இடங்களாக ஹாங்காங், மக்காவ், தென் கொரியா, வியட்னாம், தாய்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, ரஷ்யா, இந்தோனேசியா ஆகியவை இருந்தன.

குறிப்புச் சொற்கள்
குடிநுழைவுசீனாசுற்றுப்பயணி