பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் பெட்டாலிங் ஜெயா நகரை ‘டுரியான்’ பழங்களின் ‘சுனாமி’ தாக்கியுள்ளதாக மக்கள் நகைச்சுவையாக குறிப்பிடுகின்றனர்.
பழவகைகளின் ‘ராஜா’ எனக் கருதப்படும் டுரியான் பழங்களின் அறுவடை இந்தப் பருவத்தில் மிகச் சிறப்பாக உள்ளதால், அவற்றின் விலைகள் மிகவும் குறைந்துள்ளன. கடைகளில் அவற்றின் அளவு வெகுவாக நிறைந்துள்ளன.
பழங்களைச் சுவைக்க மக்கள் கூட்டம் பெருகி வருவதால், சிறப்புச் சலுகைகள், கழிவுகள் என பலவற்றை கடைக்காரர்கள் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
ஒரு மூட்டை அளவு ‘மூசாங் கிங்’ என்று அழைக்கப்படும் உயர்ந்த ரக டுரியான் பழ வகை S$42.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. நான்கு வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற பல விற்பனை முறைகளை அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவருகின்றனர்.
ஒருசில கடைகளில் சாக்குப் பை ஒன்றைக் கொண்டு எவ்வளவு பழங்களை வேண்டுமானாலும் அதுநிரம்பும்வரை அள்ளிக்கொள்ளுங்கள் என்று விட்டுவிடுகின்றனர்.
ஒரு சாக்கு 15 கிலோகிராம் டுரியான்களைக் கொள்ளும் என்று நம்பப்படுகிறது. பத்தாண்டுகளில் இல்லாத அளவு டுரியான்களின் விலை குறைந்துள்ளது என்று அதன் பண்ணை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
சீனாவில் பொருளாதார மந்தநிலையால் மலேசிய உயர்தர பழங்களுக்கான தேவை அங்கு குறைந்துள்ளது. அதுவும் அப்பழங்களின் விலை இறக்கத்தின் முக்கிய காரணம் என்று மலேசிய டுரியான் ஏற்றுமதி சங்கத் தலைவர் சேம் டான் குறிப்பிட்டுள்ளார்.

