மணிலா: அனைத்துலக குற்றவியல் விசாரணை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 14ஆம் தேதி) முன்னாள் பிலிப்பீன்ஸ் அதிபர் தமது பெயரை கூறும்போது அந்தக் காட்சியை அந்நாட்டு தேவாலயம் ஒன்றில் கண்ட மக்கள் அவருக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்தனர்.
அந்தக் காணொளிக் காட்சியை எட்டு பிலிப்பீன்ஸ் நாட்டு மாதர்கள் கண்டனர். அவர்களில் சிலர் கொல்லப்பட்ட தங்கள் கணவன்மார் படங்களையும் வேறு சிலர் தங்கள் மகன்களின் படங்களையும் கைகளில் ஏந்தியபடி பார்த்தனர்.
அந்த முன்னாள் அதிபருக்கு வயது 79ஆகிறது. அவர் மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்ள காணொளி வாயிலாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் முன் முன்னிலையாக அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதைப் பார்ப்பதற்காக வந்திருந்த கணவர்களை இழந்த மாதர்களிடமும் பிள்ளைகளை இழந்த தாய்மார்களிடமும் விசாரணையில் தற்போது திரு டுட்டர்டேயின் பெயரை மட்டுமே குறிப்பிடும் நிகழ்வு நடக்கும் என்று முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அவரது பெயரைக் கேட்பதே எங்களுக்கு அச்சம், வெறுப்பு ஆகியவை தோன்றிடப் போதுமானது என்று கூறினார் 60 வயது திருவாட்டி நோர்மிதா லோபெஸ். அவர் தன்னுடைய மகன் காவல்துறையினரால் ஐந்து முறை சுடப்பட்டார் என்று அழுதவாறே கூறினார்.
திரு டுட்டர்டே ஹேக்கில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு நீண்ட விமானப் பயணத்தை தொடர்ந்து அழைத்து வரப்பட்டுள்ளார் என்பதற்காக அவர் நேரடியாக வரத் தேவையில்லை என்றும் காணொளி வாயிலாக வந்தால் போதுமானது என்றும் நீதிமன்றம் தீர்மானித்தது. நீதிமன்றத்தின் இந்த முடிவு கேலிக்கு உள்ளானது.
“பார்ப்பதற்கு அவர் ஒன்றும் களைப்பாக இருப்பதுபோல் தெரியவில்லை,” என வந்திருந்த ஒரு மாது சத்தமாகக் கூறினார்.

