மணிலா: மனிதநேயக் குற்றங்களுக்காக ‘தி ஹேக்’ அனைத்துலக நீதிமன்றத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிலிப்பீன்சின் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே, அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மேயர் தேர்தலில் போட்டியிடத் திட்டமிடுகிறார்.
பிலிப்பீன்ஸ் அதிபராகப் பதவி வகித்தபோது மேற்கொண்ட போதைப்பொருளுக்கு எதிரான போர் நடவடிக்கை தொடர்பில் கடந்த மூன்று வாரங்களுக்குமேல் டுட்டர்டே தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
மேயர் தேர்தலில் அவருக்கு வெற்றிவாய்ப்பு சிறப்பாக இருப்பதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
கூடுதலாக, அனுதாப அலையும் அவருக்குச் சாதகமாக விளங்குவதை அவர்கள் சுட்டினர்.
நாட்டிலிருந்து வெகுதொலைவில் இருந்தபோதும் பெருந்திரளான மக்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
டுட்டர்டேயின் 80ஆம் பிறந்த நாளான மார்ச் 28ஆம் தேதி அவரது கட்சியின் நிறமான பச்சை வண்ணத்தில் உடையணிந்த ஆயிரக்கணக்கானோர் டாவோ சிட்டியில் பேரணி நடத்தினர்.
டாவோ சிட்டி மக்கள், போதைப்பொருள், சிறு குற்றங்கள், வன்முறை ஆகியவற்றுக்கு எதிராக டுட்டர்டே மேற்கொண்ட நடவடிக்கையை நினைவுகூர்ந்து அவரை ஆதரிக்கின்றனர். அவரது பதவிக்காலத்தில் டாவோ சிட்டி பாதுகாப்பான, ஒழுங்கு நிறைந்த முன்மாதிரி நகராக விளங்கியதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், சந்தேகத்துக்குரியவர்கள் நீதிமுறைக்கு அப்பாற்பட்டுக் கொலைசெய்யப்பட்ட இடம் அது என்கின்றனர் விமர்சகர்கள்.
தொடர்புடைய செய்திகள்
போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைக்காக டுட்டர்டே அமைத்த குழு, 1998ஆம் ஆண்டுக்கும் 2015க்கும் இடையே டாவோ சிட்டியில் மட்டும் 1,424 பேரைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. அவர் அதிபராகப் பதவி வகித்த காலத்தில் 12,000க்கும் 30,000க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.
இந்நிலையில், டாவோ சிட்டியின் மேயருக்கான தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார் டுட்டர்டே.