ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் செங்காங்கில் உள்ள வீவக குடியிருப்புக்கு வெளியே மின்சிகரெட் புகைத்தவாறு காணப்பட்ட முழுநேர தேசிய சேவை வீரர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்பிலான கேள்விகளுக்குப் பதிலளித்தது காவல்துறை. ஏப்ரல் 2ஆம் தேதி அதிகாலை சுமார் 1.30 மணியளவில் செங்காங் வெஸ்ட் வே, புளோக் 452A வட்டாரத்தில் உதவி கோரி அழைப்பு வந்ததாகவும், சம்பவ இடத்தில் மின் சிகரெட், வேப் பாட் சாதனங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றியதாகவும் காவல்துறை தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிக்குள் இருந்து எடுக்கப்பட்ட, இச்சம்பவம் தொடர்பிலான 28 நிமிட சிசிடிவி காணொளியைக் குடியிருப்பாளர் ஒருவர் ஸ்டோம்ப் ஊடகத்தில் பதிவுசெய்துள்ளார்.
அந்தக் காணொளியில், வெளிர் பழுப்பு நிற டி-சட்டை அணிந்த ஒருவர், தடுமாறியபடியே நடப்பது போலவும், ஒருகட்டத்தில் வீட்டிற்கு வெளியே தரையில் விழுவதும் தெரிகிறது.
அதன் பிறகு அவர் மீண்டும் எழுந்து அந்த நடைபாதையில் தொடர்ந்து வந்தபடி, அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறார். காணொளியில் உள்ள நேரத்தின்படி, அக்காட்சிகள் தொடங்கிய சுமார் 27 நிமிடங்களுக்குப் பிறகு, அதிகாலை 1.50 மணியளவில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் அங்கு வருவதும் பதிவாகியிருந்தது.
அதிகாரிகள் அந்த நபரிடம் அவரது முகவரியைக் கேட்பதும், அதை நினைவுகூர அவர் சிரமப்படுவதும் காணொளிப் பதிவில் தெரிகிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர் காவல்துறை அதிகாரிகளுடன் அங்கிருந்து செல்கிறார்.
இதன் தொடர்பில் ஏப்ரல் 24ல் தற்காப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் சிங்கப்பூர் ஆயுதப் படையில் பணியாற்றும் தேசியச் சேவை வீரர் என்றும், அவர் சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

