கோலாலம்பூர்: பொதுச் சுகாதாரத்துக்கான புகைபிடிக்கும் பொருள்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் இணையத் தளங்களில் மின்சிகரெட்டுகளை விற்க நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ரகசிய சந்தைகளில் அவற்றின் விற்பனை சூடுபிடித்து வருகிறது.
ஒழுங்குமுறை அதிகாரிகளின் பார்வையில் படாமல் அந்த விற்பனை நடைபெற்று வருகிறது.
மலேசியாவில் பெருகிவரும் ரகசிய சந்தைகளிலிலிருந்து மின்சிகரெட்டுகளை வாங்க, ஏற்கெனவே அதில் வாடிக்கையாளராக உள்ள ஒருவர் பரிந்துரை செய்ய வேண்டும்.
பரிந்துரைத்தவரின் அடையாளங்களைச் சரி பார்த்த பிறகே நிர்வாகி ஒருவர், மின்சிகரெட்டுகளின் முழுப்பட்டியல் அடங்கிய தளங்களில் நுழைய அனுமதிக்கிறார்.
இத்தகைய தளங்கள் சாதாரணமாக வெளியே தெரிவதில்லை. 32,000 முறை வரை புகைக்கக்கூடிய மின்சிகரெட்டுகளும் இதில் இடம்பெற்றுள்ளன. சட்டம் 852ன்படி புகைக்கும் அளவு 3,000ஐத் தாண்டக்கூடாது என்ற வரம்பை இது மீறுவதாகும்.
புதிய ஒழுங்குமுறையின்கீழ் தடை செய்யப்பட்ட பல சுவைகளைக் கொண்ட மின்சிகரெட்டுகள், அவற்றிற்கான துணைக்கருவிகள் உள்ளிட்டவை ரகசியத் தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ளன.
பொது விற்பனைத் தளங்களான ஷாப்பி, லசாடா போன்றவற்றிலிருந்து மின்சிகரெட்டுகளை அதிகாரிகள் வெற்றிகரமாக அகற்றியிருந்தாலும் கள்ளச் சந்தைகளில் அதன் விற்பனை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இணையத்தளங்களை முடக்குவது போன்ற பாரம்பரிய நடவடிக்கைகளால் சட்டவிரோத விற்பனையைத் தடுக்க முடியாது என்று இணையப் பாதுகாப்பு வல்லுநர்கள் பலர் கூறியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
அவற்றை ஆய்வு செய்த வல்லுநர்கள், நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவை வளர்ந்து வருவதாகக் கூறினர்.
“முறைப்படுத்தப்படாத மின்சிகரெட்டுகளை பொருள்களை விற்கும், ‘அழைப்பின் பேரில் மட்டுமே அனுமதிக்கும்’ சமூக ஊடகக் குழுக்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது கடினம். என்றாலும், அது சாத்தியம்தான்,” என்று மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணையப் பாதுகாப்பு ஆய்வுமைய இயக்குநர் எம்.செல்வகுமார் தெரிவித்தார்.
குறியாக்கத் தொழில்நுட்பம் குறுஞ்செய்திகளின் உள்ளடக்கத்தைப் பார்ப்பதைக் குறைப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஆனாலும் விசாரணைகள் என்பது குறுஞ்செய்திகளைப் படிப்பதை மட்டுமே நம்பி இருப்பதில்லை என்றும் சொன்னார்.
அத்தகைய குழுக்களை மிக வேகமாகவும் பெரிய அளவிலும் மீண்டும் உருவாக்க முடிவதும், அவர்கள் வெவ்வேறு தளங்களுக்கு விரைவாக மாறுவதுமே செயல்பாடு சார்ந்த சவால்களில் அடங்கும் என்று டாக்டர் செல்வகுமார் குறிப்பிட்டார்.

