தென்னாப்பிரிக்கா: தென்னாப்பிரிக்காவின் குரூகர் தேசியப் பூங்காவில், மாண்ட யானையின் சடலத்தை உண்டபின் 123 கழுகுகள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்டைக்காரர்கள் அந்த யானைக்கு நஞ்சு ஊட்டியதால் அது மாண்டதாகப் பூங்கா அதிகாரிகளும் விலங்குப் பாதுகாப்புக் குழுவினரும் வியாழக்கிழமை (மே 8) கூறினர்.
அந்த இடத்திலிருந்து மேலும் 83 கழுகுகள் மீட்கப்பட்டு, ஹெலிகாப்டர் மூலம் சிகிச்சைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் அவை தற்போது குணமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
யானையின் உடற்பாகங்களைச் சட்டவிரோதமாக விற்பதற்காக வேட்டைக்காரர்கள் அதற்கு நஞ்சு ஊட்டிக் கொன்றதாகத் தெரிகிறது. அவர்கள் வேளாண் பூச்சிக்கொல்லி மருந்துகளை அவ்வாறு விலங்குகளுக்கு ஊட்டுவதாகக் கூறப்பட்டது.
மாண்ட விலங்குகளின் சடலங்களைத் தின்று, சுற்றுச்சூழலைச் சுத்தமாக்க உதவும் கழுகுகள் காடுகளின் பல்லுயிர்ச்சூழலுக்கு முக்கியமானவை.
இத்தகைய நஞ்சூட்டும் சம்பவங்களால் ஆப்பிரிக்காவில் பல்வேறு கழுகு இனங்கள் அழியும் அபாயத்தை எதிர்கொள்கின்றன.
இது கழுகுகளின் இனப்பெருக்க காலத் தொடக்கம் என்பதால் சம்பவ இடத்தில் காணப்படாத கழுகுகளும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று கழுகுகள் பாதுகாப்பு அமைப்பான ‘வல்புரோ’ கூறியது.