வாஷிங்டன்: இரவு நேரங்களில் மின்விளக்குகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால் பூமியில் வெளிச்சம் அதிகமாக இருப்பதாக அன்றாடச் செயற்கைக்கோள் கண்காணிப்புத் தரவுகள் கூறுகின்றன.
குறிப்பாக, ஆப்பிரிக்காவின் சகாரா துணைக் கண்டத்திலும் தென்கிழக்கு ஆசியாவிலும் வெளிச்சம் அதிகரித்துள்ளது.
அதேநேரம் ஐரோப்பாவில் எரிசக்தி சேமிப்பு, ஒளி மாசு குறித்த கவலை உள்ளிட்ட காரணங்களால் இரவில் மின்விளக்குகள் பயன்படுத்தும் போக்கு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வெளிச்சம் குறைவாக உள்ளது.
2014ஆம் ஆண்டு முதல் 2022 வரை இரவு நேர வெளிச்சம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வின்படி, உலக அளவில் இரவு நேரங்களில் வெளிச்சம் 16 விழுக்காடு கூடியுள்ளது தெரியவந்துள்ளது.
பல்வேறு காரணங்களால் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெளிச்சம் அதிகரித்தும் குறைந்தும் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
இரவு நேரங்களில் மின்விளக்குப் பயன்பாடு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் சீனாவும் அதையடுத்து இந்தியா, கனடா, பிரேசில் நாடுகளும் உள்ளன.
நகரமயமாக்கல், கட்டமைப்பு விரிவாக்கம், கிராமப் பகுதிகளில் மின்சாரப் பயன்பாடு ஆகியவை இரவு நேரங்களில் அதிக வெளிச்சம் தேவைப்படுவதற்கான காரணங்களாக உள்ளன.

