அந்தமான் நிகோபார் தீவுகளை உலுக்கிய 5.4 ரிக்டர் நிலநடுக்கம்

அந்தமான் நிகோபார் தீவுகளை உலுக்கிய 5.4 ரிக்டர் நிலநடுக்கம்

படம்: இணையம்

09 Nov 2025 - 5:29 pm

1 mins read

ஸ்ரீவிஜயபுரம்: 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அந்தமான் நிகோபார் தீவுகளை உலுக்கியது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் அந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த அதிர்வு உள்ளூர் நேரம் நண்பகல் மணி 12 அளவில் உணரப்பட்டது. இந்தியாவின் அதிகாரபூர்வ நிறுவனமான தேசிய நிலநடுக்கவியல் மையம்  நிலநடுக்கத்தின் அளவை 5.4 ரிக்டர் என்று அளவிட்டது.

நிலநடுக்கம் அந்தமான் கடலுக்கு அடியில் சுமார் 90 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்தது. மற்றொரு அமைப்பான ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம், அதன் அளவு 6.07 ரிக்டர் என்று சற்று அதிக அளவில் பதிவாகியதாகக் கூறியுள்ளது.

இதுவரை உடற்சேதமோ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. அத்துடன், கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இந்தத் தீவுகள் இந்தியாவின் அதிகபட்ச நிலநடுக்க அபாயப் பகுதியான மண்டலம் ஐந்தில் உள்ளன. நிலநடுக்கம் ஆழத்தில் ஏற்பட்டதால், இதில் ஆபத்தான சுனாமியை ஏற்படுத்தும் வாய்ப்பு குறைவாக இருந்தது. 

அண்மைய சூறாவளி எச்சரிக்கைகள் காரணமாக இப்பகுதி தொடர்ந்து உயர் எச்சரிக்கை நிலையில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்