கிழக்கு லிபியாவில் வெள்ளம்; 2,000 பேர் உயிரிழப்பு

கிழக்கு லிபியாவில் வெள்ளம்; 2,000 பேர் உயிரிழப்பு

2 mins read
00db61cd-0d84-4d37-a690-fc86ad6bd307
செப்டம்பர் 11ஆம் தேதி லிபியாவின் ஷாஹாத் நகரில் வீசிய புயலால் அந்நகரச் சாலைகள் சேதமடைந்துள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்

பெங்காஸி: லிபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள டெர்னா நகரில் வீசிய கடும் புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி குறைந்தது 2,000 பேர் உயிரிழந்ததாகவும் 10,000 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

1,000க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் மீட்புப் பணிகள் அவசரமாக நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

புயலால் அணைகள் இடிந்து விழுந்தன. அவற்றிலிருந்து வெளியான நீர், டெர்னா நகரில் உள்ள குடியிருப்புகளை கடலுக்குள் அடித்துச் சென்றதாகக் கூறப்பட்டது.

5,000 முதல் 6,000 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குமாறு நட்பு நாடுகளையும் அனைத்துலக அமைப்புகளையும் லிபிய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த வாரம் கிரீஸைப் பாதித்த ‘டேனியல்’ புயல், ஞாயிற்றுக்கிழமை டெர்னா நகரில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காஸி உட்பட, கரையோரப் பகுதிகளின் குடியிருப்புகளை அது அழித்தது.

டெர்னா நகரின் மையப்பகுதி வழியாக வெள்ளம் ஒரு நீரோடைபோல ஓடுவதையும் சாலையின் இருபுறமும் புயலால் இடிந்த கட்டடங்களையும் அந்நாட்டுத் தொலைக்காட்சியில் வெளியான காணொளியில் காண முடிந்தது.

வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்கள் தங்கள் வாகனங்கள்மீது ஏறி நின்று, உதவிக்காக மற்றவர்களை அழைப்பதையும் அதில் காண முடிந்தது.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக லிபியாவில் செயல்படும் ஐக்கிய நாட்டு நிறுவனப் பிரிவு தெரிவித்தது. நிவாரணப் பணிகளில் உடனடியாக உதவுமாறு கத்தார் அரசாங்கத்திற்கு ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார்.

மூன்று நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என லிபியா அரசாங்கம் அறிவித்தது. இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் அப்துல் ஹமீது அல் தைபா, பாதிக்கப்பட்ட அனைத்து நகர்களிலும் மூன்று நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் எனக் கூறினார்.

கிழக்கு நகர்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பை உடனடியாகக் கையாள அனைத்து அரசாங்க அமைப்புகளுக்கு இடைக்கால அரசாங்கம் உத்தரவிட்டது.

வெள்ளப்பெருக்கு காரணமாக கிழக்கு நகரான டெர்னாவில் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டடங்களும் வாகனங்களும் சேதமுற்றன.
வெள்ளப்பெருக்கு காரணமாக கிழக்கு நகரான டெர்னாவில் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டடங்களும் வாகனங்களும் சேதமுற்றன. - படம்: ஏஎஃப்பி
குறிப்புச் சொற்கள்
வெள்ளம்உயிரிழப்பு