ஒட்டு கேட்கும் விவகாரம்; நாகரிக அரசியலுக்குத் திரும்ப யுதோயோனோ அழைப்பு

ஒட்டு கேட்கும் விவகாரம்; நாகரிக அரசியலுக்குத் திரும்ப யுதோயோனோ அழைப்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

04 Nov 2026 - 5:56 pm

2 mins read

ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் உரையாடல்களை ஒட்டுக் கேட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு மூன்று காவல்துறை உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாடு மீண்டும் நாகரிக அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என்று முன்னாள் இந்தோனீசிய அதிபர் சுசிலோ பாம்பாங் யுதோயோனோ அழைப்பு விடுத்துள்ளார்.

“நமது நாடு எவ்வாறு இந்நிலைக்கு வந்து சேர்ந்தது? நமது அரசியல் எவ்வாறு இவ்வளவு நாகரிகமற்றதாக மாறியது? அரசியல் அதிகார வேட்கையில், சரி அல்லது தவறு, அறம் அல்லது ஒழுக்கக்கேடு என எதையும் பொருட்படுத்தாமல் அனைத்து வழிகளும் நியாயப்படுத்தப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது,” என்று புதன்கிழமையன்று தனது அதிகாரபூர்வ ‘எக்ஸ்’ தளப் பதிவில் திரு யுதோயோனோ குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபர்களில் ஒருவரான லிஸ்டியோ சிகிகிட் பிரபோவோ, 2021 முதல் 2026ஆம் ஆண்டு வரை தேசியக் காவல்துறைத் தலைவராகப் பணியாற்றியவர் என்பதுடன், அண்மையில்தான் அதிபரின் தலைமைப் பணியாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த விவகாரம் இந்தோனீசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, ஒட்டுக் கேட்பின் தீவிரத்தன்மை குறித்தும் அதன் பின்னணியில் உள்ள உள்நோக்கங்கள் குறித்தும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

சந்தேக நபர்கள் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கம் கொண்டிருந்ததற்கான எந்தவித முகாந்திரமும் இதுவரை இல்லை என்றும் எனினும் இது தொடர்பாகத் தீவிர விசாரணை தேவை என்றும் சட்ட விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் யுஸ்ரில் இஹ்சா மகேந்திரா செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 3) தெரிவித்தார்.

“இது வரலாற்றின் அழைப்பு. மக்கள் வழங்கிய ஆணை. இந்த உன்னதமான பணியை முன்னெடுக்க அதிபர் பிரபோவோவுக்கு இறைவன் வலிமையையும் நல்வழிகாட்டுதலையும் வழங்கட்டும்,” என்று திரு யுதோயோனோ கூறினார்.

முன்னதாக, 2013ஆம் ஆண்டில் ‘தி கார்டியன்’ ஊடகம் வெளியிட்ட கசிந்த ஆவணங்களின்படி, ஆஸ்திரேலிய உளவு அமைப்புகளால் நடத்தப்பட்ட ஒட்டுக் கேட்பு முயற்சிக்கு திரு யுதோயோனோவே பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்