சிங்கப்பூரின் முன்னோடிக் கவிஞர்களில் ஒருவரும் தமிழில் சித்திரக் கவிதைகள் வடிப்பதில் முத்திரை பதித்தவருமான அமரர் வி. இக்குவனம் ஐயா அனைவருடனும் அன்புடன் பழகக்கூடியவர் என்பதுடன் வீட்டுக்கு வருவோரை உணவருந்தச் செய்யாமல் அனுப்பமாட்டார் என்றார் அவரது இளைய மகனும் நிபுணத்துவ மருத்துவருமான டாக்டர் இ. சுவாமிநாதன்.
கடினமான கவிதை வடிவத்தை மிக எளிதாகக் கையாண்ட இக்குவனம் ஐயாவின் தமிழ்ப் பணிகள் குறித்துத் தமிழ் முரசின் ‘ஆய கலை அரிய கலைஞர்’ வலையொளித் தொடரின் எட்டாம் நிகழ்ச்சியில் அவர் பகிர்ந்துகொண்டார்.
இனிமையான பண்புகள் கொண்டிருந்த இக்குவனம் ஐயா, பிள்ளைகளின் நலன் கருதிக் கண்டிப்புடனும் நடந்துகொண்டதாகக் கூறிய டாக்டர் சுவாமிநாதன் அதன் பலனைத் தாமும் தமது சகோதரரும் சகோதரியும் நன்கு உணர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
தமது தந்தையார், மலாயாப் பல்கலைக்கழகத்தின் தமிழ்க் கல்விப் பிரிவு தொடங்கப்பட்டபோது அங்கு நூலகராகச் சேர்ந்ததாகவும் அதன் வாயிலாகப் பல்வேறு தமிழ் நூல்களைப் படித்ததில் கவிதை வடிக்கத் தொடங்கியதாகவும் அந்தப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் ராசாக்கண்ணு தமது தந்தைக்கு ஊக்கசக்தியாக விளங்கியதாகவும் அவர் கூறினார்.
தமிழ்த் திறனால் தமது தந்தை ஆற்றிய சமயத் தொண்டுகள் பற்றியும் அவர் பகிர்ந்துகொண்டார். முருகன், அம்பாள் பெயரில் வடமொழியில் அமைந்துள்ள ‘சகஸ்ரநாமம்’ (இறையைப் போற்றும் 1,008 பெயர்கள்) என்னும் துதியைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்ததாகக் கூறினார்.
ருத்ரகாளியம்மன் கோயிலின் நிர்வாகக் குழுவில் பணியாற்றியபோது தமிழில் அர்ச்சனை செய்யும் முறை தொடங்கப்பட்டதற்கு முக்கியக் காரணமாகத் தமது தந்தை விளங்கியதாக டாக்டர் சுவாமிநாதன் குறிப்பிட்டார். பொருள் புரியும் வகையில் அமைந்ததால் சமூகத்தில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும் அவர் சொன்னார்.
அந்தாதி வடிப்பதில் ஆர்வம் காட்டிய இக்குவனம் ஐயா, சமயக் கருத்துகளில் வேறுபட்டாலும் தமிழுக்குத் தொண்டாற்றிய தந்தை பெரியார், கலைஞர் கருணாநிதி போன்றோர் மீதும் அந்தாதி பாடியதாகக் குறிப்பிட்டார் டாக்டர் சுவாமிநாதன். சமய நம்பிக்கை இல்லாதோர் மட்டுமன்றி பிற சமயம் சார்ந்தோருடனும் நட்பு பாராட்டிய தம் தந்தை பள்ளிவாசல்களில்கூட உரையாற்றியதுண்டு என்றார் அவர்.
தமிழில் ஓவியப்பா எனப்படும் சித்திரக் கவிதை வடிப்போரின் எண்ணிக்கை மிகக் குறைவு. மிக அரிதான அந்த வகைப் பாக்களை நேர்த்தியுடன் வடித்தவர் அமரர் இக்குவனம். மரபுக் கவிதை, அந்தாதி, வெண்பா என விரிந்துகொண்டே வந்த அவரது ஆர்வம் ஒரு கட்டத்தில் சித்திரக் கவிதைகளின்பால் திரும்பியது. தமது இயல்பான ஆர்வம் உந்த, அதுதொடர்பான பல்வேறு நூல்களைப் படித்துத் தமது புலமையை அவர் செதுக்கிக்கொண்டதாக டாக்டர் சுவாமிநாதன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
கற்பனைக்கு எட்டக்கூடிய எல்லா வடிவங்களிலும் சித்திரக் கவிதை வடித்த தமது தந்தைக்கு மிகவும் பிடித்தது அன்னப் பறவை வடிவில் வெண்பா வடிப்பது என்றார் அவர். அட்ட நாக பந்தம் போன்ற கடினமான வடிவங்களில் படைத்ததுடன் ஆங்கிலத்தில் ‘பேலிண்ட்ரோம்’ (Palindrome) எனப்படும் வலமிருந்து இடமாகவும் இடமிருந்து வலமாகவும் படிக்கையில் அதே சொற்கோவை இருக்கக்கூடிய மாலை மாற்று எனும் வடிவத்திலும் சித்திரக் கவிதைகளை எழுதியதை அவர் சுட்டினார்.
சித்திரக்கவிதையை எப்படி வாசிக்க வேண்டும் என்று உதவும் வகையில் ஒவ்வோர் எழுத்துக்கும் எண்களை உதவிக் குறிப்பாக வழங்குவது இக்குவனம் ஐயாவின் வழக்கம். தமது தந்தை கவிதைகளைத் தம் கைப்பட தட்டச்சு செய்யப் பயன்படுத்திய தமிழ்த் தட்டச்சு இயந்திரத்தை இந்திய மரபுடைமை நிலையத்திற்குத் தம் குடும்பத்தினர் நன்கொடையாக வழங்கியதை அவர் நினைவுகூர்ந்தார்.
கவியரங்கங்களில் தமது தந்தை கலந்துகொண்டபோது நிகழ்ந்த சுவையான சம்பவங்கள் குறித்த தகவல்களையும் அவர் பகிர்ந்தார்.
மலேசிய வானொலி, தொலைக்காட்சியிலும் பின்னர் சிங்கப்பூர் வானொலியிலும் செய்தித்துறை சார்ந்த இக்குவனம் ஐயாவின் பணிகளைப் பற்றியும் பெருமையுடன் விவரித்தார். குறிப்பாக, இந்தியாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டபோது அதன் பின்னணியை விளக்கும் விதமாகத் தமிழ் முரசில் இக்குவனம் ஐயா எழுதிய தலையங்கம் இந்தியாவில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றதாகவும் இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி நேரில் வரவழைத்துப் பாராட்டியதாகவும் கூறினார்.
படிப்பு, பணிச்சுமை என்று இருந்ததால் அப்பாவின் தமிழ்ப் பணி குறித்த அருமை அப்போது அதிகம் புரியவில்லை என்றும் இப்போது அதை உணர்வதாகவும் குறிப்பிட்டார் டாக்டர் சுவாமிநாதன். சென்ற ஆண்டு தமிழ் மொழி விழாவின்போது லிட்டில் இந்தியாவில் லிஷா அமைப்பினர் உள்ளூர்த் தமிழ்க் கவிஞர்களின் வரிகளைப் பதாகைகளாகை அமைத்தபோது, அதற்கென இக்குவனம் ஐயாவின் வரிகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தவர் இவர். ஐயாவின் நினைவாக அவரது குடும்பத்தினர் தமிழ் மொழி விழாவையொட்டி வழங்கப்படும் கணையாழி விருதுக்கான செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
குடும்பத்துக்கு மிகவும் முக்கியத்துவம் தந்தவர் இக்குவனம் ஐயா என்றும் கூட்டுக் குடும்பத்தின் சுவையைத் தங்களுக்கு உணர்த்தியவர் என்றும் குறிப்பிட்ட டாக்டர் சுவாமிநாதன், குடும்பத்தினரிடம் அவர் காட்டிய அன்பு கலந்த கண்டிப்பின் பலன்களைத் தாங்கள் அனைவருமே உணர்ந்துள்ளதாகக் கூறினார்.

