அதிபர் டிரம்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் எட்டு மில்லியன் பேர் ஆர்ப்பாட்டம்

அதிபர் டிரம்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் எட்டு மில்லியன் பேர் ஆர்ப்பாட்டம்

2 mins read
ad639e82-e5e2-440a-b4df-b1b57bb8a1fc
ஜார்ஜியா மாநிலத் தலைநகர் அட்லான்டாவில் ‘மன்னர்கள் அல்லர்’ பேரணி தொடங்கியபோது காத்திருந்த காவல்துறை அதிகாரிகள். - படம்: ஏஎஃப்பி

மினியாபொலிஸ்: அமெரிக்கா முழுவதும் மார்ச் 28ஆம் தேதி அதிபர் டிரம்ப்புக்கு எதிராக மாபெரும் பேரணிகள் நடைபெற்றன.

டிரம்ப்பின் சர்வாதிகாரப் போக்கு, கடுமையான் குடியேற்றக் கொள்கைகள், ஈரானுடனான போர் ஆகியவற்றுக்கு எதிராக அவர்கள் தங்கள் சினத்தை வெளிப்படுத்தினர்.

“நாடு முழுவதும் ஐம்பது மாநிலங்களில் உள்ள சிறு நகரங்கள் முதல் பெருநகரங்கள்வரை நடைபெற்ற 3,300க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது எட்டு மில்லியன் பேர் திரண்டனர்,” என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர். ஆனால் அமெரிக்க அதிகாரிகள் அவற்றில் பங்கேற்றோர் எண்ணிக்கை பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

ஓராண்டுக்குள் மக்கள் மூன்றாவது முறையாக ‘மன்னர்கள் அல்லர்’ இயக்கத்தில் பங்கேற்றுள்ளனர்.

அமெரிக்காவில் மக்கள்தொகை அதிகமுள்ள நியூயார்க்கிலும் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆஸ்கர் விருது பெற்ற ராபர்ட் டி நிரோவும் பங்கேற்றார். இவர், டிரம்ப்பைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். சுதந்திரத்துக்கும் பாதுகாப்புக்கும் டிரம்ப் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அட்லான்டா முதல் சான் டியாகோ வரை ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதே நாளில் அலாஸ்கா மக்களும் அதில் பங்கேற்கவிருந்தனர்.

“மக்களின் சம்மதம் இல்லாமல் எந்த நாடும் ஆட்சி செய்ய முடியாது,” என்று அட்லான்டாவில் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் பேசிய 36 வயது ராணுவ வீரர் மார்க் மெக்காகே தெரிவித்தார்.

அரசியலமைப்புச் சட்டத்திற்குப் பல வழிகளில் மிரட்டல் ஏற்பட்டுள்ளதாகவும் அசாதாரணமான சூழ்நிலை நிலவுவதாகவும் அவர் கூறினார்.

டெட்ராய்ட் அருகே மிச்சிகன் நகரமான வெஸ்ட் புளூம்ஃபீல்டில் மக்கள் உறையவைக்கும் பனியிலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் பேரணியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கானவர்களில் சிலர் டிரம்ப் ‘இப்போதே வெளியேற வேண்டும்’ போன்ற பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர்.

“டிரம்ப் பொய் பொய்யாகப் பேசுகிறார். ஒரு மோசமான சூழ்நிலையில் இருக்கிறோம்,” என்று ஓய்வுபெற்ற 67 வயது முதியவர் ராபர்ட் பாவோசெவிக் ஏஎஃப்பியிடம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்