மலாக்கா: மலாக்கா சட்டமன்றத்துக்கான வாக்குப்பதிவு நாள் குறித்து வெவ்வேறு அரசியல் தலைவர்கள் வெவ்வேறு கருத்துகளை வெளிப்படுத்தி உள்ளனர்.
மலாக்கா சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நவம்பர் 14ஆம் தேதி என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்குப்பதிவுக்குத் தயாராக போதுமான காலம் இருப்பதாகச் சில அரசியல்வாதிகள் தெரிவித்துள்ள வேளையில், தீபாவளிப் பண்டிகைக்கு மிக அருகில் தேர்தல் தேதி அமைந்திருப்பது வாக்காளர்களின் வருகையைப் பாதிக்கலாம் என்று சிலர் எச்சரித்துள்ளனர்.
தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள கால அட்டவணை நியாயமானது என்றும் அதற்குப் பின்னால் அரசியல் காரணங்கள் இருப்பதாகக் சந்தேகிக்கக் கூடாது என்றும் மலாக்கா மாநில தேசிய முன்னணியின் தலைவர் அப் ரவூஃப் யூசோ கூறினார்.
வாக்குப்பதிவுக்குத் தேவைப்படும் சாதனங்களை ஏற்பாடு செய்வதற்கும் பொருத்தமான வாக்குச்சாவடிகளை அடையாளம் காண்பதற்கும் தேர்தல் ஆணையத்திற்குப் போதுமான கால அவகாசம் தேவைப்படுகிறது என்று கூறினார் மலாக்கா இடைக்கால முதலமைச்சருமான திரு அப் ரவூஃப்.
“இந்தக் கால அவகாசம் மிகவும் அதிகம் என்று நான் நினைக்கவில்லை. அக்டோபரிலேயே வாக்குப்பதிவை நடத்த நாங்கள் பரிந்துரைத்திருந்தோம். வேட்புமனுத் தாக்கலை அக்டோபர் 17ஆம் தேதியும் வாக்குப்பதிவை அக்டோபர் 31ஆம் தேதியும் வைத்துக்கொள்ளலாம் என்பது எங்களது பரிந்துரை.
“இருப்பினும், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள தேதியில் எந்தப் பிரச்சினையும் இல்லை, இதனை நாம் சந்தேகக் கண் கொண்டு பார்க்கவோ அல்லது இது ஓர் உத்திபூர்வ செயல் என்று நினைக்கவோ கூடாது,” என்று அவர் கூறினார்.
இருப்பினும், பண்டிகைக் காலத்தில் வாக்காளர்களி எதிர்கொள்ளும் பணிச் சுமைகள் மற்றும் பயணத் திட்டங்களைத் தேர்தல் ஆணையம் கருத்தில் கொண்டுள்ளதா என்று மலாக்கா மாநில பக்கத்தான் ஹரப்பான் துணைத் தலைவர் கூ போய் தியோங் கேள்வி எழுப்பினார்.
“ஞாயிற்றுக்கிழமையான நவம்பர் 15 வாக்குப்பதிவு நாளாக அமைந்திருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும். காரணம், சனிக்கிழமை பலருக்கு வேலை நாளாகவே உள்ளது,” என்றும் அவர் கூறினார்.
“மாநிலத்துக்கு வெளியே உள்ள மலாக்கா மக்கள் நவம்பர் 8ஆம் தேதி தீபாவளிக்காக சொந்த ஊருக்கு வந்துவிட்டு திரும்பிய பின்னர், ஒரு வாரத்திற்குள் வாக்களிப்பதற்காக மற்றொரு பயணம் மேற்கொள்வது கடினமாக இருக்கலாம்,” என்றும் திரு கூ கவலை தெரிவித்தார்.
“இவை அனைத்தும் கருத்தில் கொள்ளப்பட்டிருக்க வேண்டும், ஏனெனில் பலர் பண்டிகையைக் கொண்டாடுவதிலேயே கவனம் செலுத்துவார்கள்.
“ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்கள், குறிப்பாகப் பிற மாநிலங்களில் பணிபுரியும் இளையர்கள் வாக்களிக்கத் திரும்ப மாட்டார்களோ என்ற கவலை எழுந்துள்ளது,” என்றார் அவர்.
மலாக்கா மாநில பெரிகாத்தான் நேஷனல் துணைத் தலைவர் மைக்கல் கான் பெங் லாம், அக்டோபர் இறுதியில் வாக்குப்பதிவு நடைபெறாதது ஆறுதல் அளிப்பதாகக் கூறி, தேர்தலுக்குத் தயாராகக் கூடுதல் நேரம் கிடைத்திருப்பதை வரவேற்றார்.
