ஹாங்காங்: ஹாங்காங்கில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7) தேர்தல் நடைபெறுகிறது.
சீனாவின் நாட்டுப்பற்று விதிமுறையின்கீழ் இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும், குடியிருப்புக் கட்டடங்களில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்தபிறகு தேர்தல் நடைபெறுவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காலை 7.30 மணிக்கு வாக்களிப்பு தொடங்கியது. ஆனால், 90 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 20 உறுப்பினர்களை மட்டுமே நேரடியாகத் தேர்ந்தெடுக்க முடியும்.
நவம்பர் பிற்பகுதியில் வாங் ஃபுக் கோர்ட்டில் உள்ள குடியிருப்புக் கட்டடங்களில் தீ விபத்து நிகழ்ந்ததைத் தொடர்ந்து அரசியல் பிரசாரங்கள் நிறுத்தப்பட்டன. இந்த விபத்தில் 159 பேர் வரை கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், ஹாங்காங்கின் தலைவர் ஜான் லீ, தேர்தலில் வாக்களிக்கும்படி டிசம்பர் 5ஆம் தேதி பொதுமக்களை கேட்டுக்கொண்டார். அவர்களுடைய வாக்கு சீர்திருத்தத்தைப் பிரதிநிதிப்பதோடு தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.
நிவாரணம் மற்றும் மறுநிர்மாண முயற்சிகள் குறித்து விவாதிக்க புதிய நாடாளுமன்றக் கூட்டத்தின் முதல் கூட்டத்தில் அரசாங்கம் ஒரு மசோதாவை முன்மொழியும் என்றும் திரு லீ உறுதியளித்தார்.
திரு லீ, முன்னதாக தீ விபத்து குறித்து விசாரிக்க ஒரு நீதிபதியின் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
தீ விபத்து காரணமாக டிசம்பர் 3ஆம் தேதிவரை பல்வேறு கட்டுமான நிறுவனங்களைச் சேர்ந்த 15 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, சீனாவின் ஹாங்காங்கில் உள்ள தேசியப் பாதுகாப்பு அலுவலகம், தீவிபத்து குறித்து தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று வெளிநாட்டு ஊடகங்களை டிசம்பர் 6ஆம் தேதி எச்சரித்தது.

