சாபா ஆற்றில் மிதந்த தந்தங்கள் இல்லாத யானை; வனத்துறை விசாரணை

சாபா ஆற்றில் மிதந்த தந்தங்கள் இல்லாத யானை; வனத்துறை விசாரணை

படம்: த போர்னியா ஃபோஸ்ட்

05 Oct 2026 - 3:37 pm

1 mins read

கோத்தா கினபாலு: அங்கோ ஜெயா தோட்டம், கினபத்தாங்கன் வனவிலங்கு சரணாலயத்தின் பகுதி 4க்கு அருகே உள்ள கினபத்தாங்கன் ஆற்றில் ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது தொடர்பாகச் சாபா வனவிலங்குத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

பொந்தியான் தோட்டத்திற்கு அருகிலுள்ள ஆற்றில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு முதன்முதலில் தகவல் கிடைத்ததாக சாபா மாநிலத்தின் சுற்றுலா, கலாசார, சுற்றுப்புற அமைச்சர் ஜாஃப்ரி ஆரிஃபின் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, விரைவு மீட்புக் குழுவும் சுகாவ் பகுதியைச் சேர்ந்த சிறப்பு வனவிலங்குக் காவலர்களும் அடங்கிய குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

அறிவிக்கப்பட்ட இடத்திலிருந்து நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானையின் உடலை அவர்கள் பின்னர் கண்டறிந்தனர்.

“அங்கோ ஜெயா தோட்ட இயந்திரங்களின் உதவியுடன் யானையின் உடல் ஆற்றங்கரைக்கு உடற்கூராய்வுக்காக இழுத்து வரப்பட்டது. அந்த யானை தோராயமாக ஆறு அடி உயரமும், 14 முதல் 18 வயதுக்குட்பட்டதுமான ஆண் யானை என அடையாளம் காணப்பட்டது. உடலின் நிலையைப் பார்க்கும்போது, பரிசோதனைக்கு நான்கு அல்லது ஐந்து நாள்களுக்கு முன்பே அது இறந்திருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது,” என அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

யானையின் உடலில் பல காயங்கள் இருந்ததாகவும் அதன் இரு தந்தங்களும் காணாமல் போயுள்ளதாகவும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாசாபாயானை