தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய அரசாங்கப் பிரிவின் தலைவர்களாக எலோன் மஸ்க், விவேக் ராமசாமி

2 mins read
bef35e8f-e00b-43c5-9262-6395a0bfad2f
எலோன் மஸ்க், விவேக் ராமசுவாமி. - படங்கள்: நியூயார்க் டைம்ஸ், ஏஎஃப்பி

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள டோனல்ட் டிரம்ப், செல்வந்தர் எலோன் மஸ்க், விவேக் ராமசுவாமி ஆகியோருக்குப் பொறுப்பு வழங்கியுள்ளார்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வ அரசாங்கப் பிரிவின் (Department of Government Efficiency) தலைவர்களாக திரு மஸ்க், திரு ராமசுவாமி இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். திரு ராமசுவாமி, இவ்வாண்டு அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகக் களமிறங்க முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.

புதிய ஆக்கபூர்வ அரசாங்கப் பிரிவு, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் செயல்படும் என்றார் திரு டிரம்ப். திரு மஸ்க்கும் திரு ராமசுவாமியும் வழிநடத்தவுள்ள அப்பிரிவு, அரசாங்க நடைமுறைகளை அகற்றி, தேவையற்ற விதிமுறைகளை விலக்கி, செலவைக் குறைத்து மத்திய அரசாங்க அமைப்புகளை மறுசீரமைக்கும் என்று அறிக்கை ஒன்றில் திரு டிரம்ப் விவரித்தார்.

புதிய பிரிவு, குடியரசுக் கட்சி பலகாலமாகக் கொண்டுள்ள கனவுகளை நனவாக்குவதுடன் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் செயல்பட்டபடி அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கும் என்றும் திரு டிரம்ப் குறிப்பிட்டார்.

திரு மஸ்க், திரு ராமசுவாமி இருவரின் புதிய பொறுப்புகள் அதிகாரபூர்வமற்றவையாக இருக்கும். அதனால், எக்ஸ் சமூக ஊடகம், ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனம் ஆகியவற்றின் தலைவராக திரு மஸ்க் தொடர்ந்து பொறுப்பு வகிக்க செனட் ஒப்புதல் தேவைப்படாது என்றும் திரு டிரம்ப் சுட்டினார்.

இதுவரை காணப்படாத வகையில் அரசாங்கத்தில் பெரிய அளவிலான கட்டமைப்பு மாற்றங்களைக் கொண்டுவரவும் தொழில் முனைப்பு மனப்போக்கை உருவாக்கவும் புதிய ஆக்கபூர்வ அரசாங்கப் பிரிவு, வெள்ளை மாளிகையுடனும் நிர்வாக, வரவுசெலவு அலுவலகத்துடனும் இணைந்து பணியாற்றும் என்று திரு டிரம்ப் தெரிவித்தார். 2026ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதிக்குள் அதன் தொடர்பிலான பணிகள் நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

அன்றைய தினம், அமெரிக்கா அதன் 250வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்.

குறிப்புச் சொற்கள்