நியூயார்க்: டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இலோன் மஸ்க், வரலாறு காணாத சம்பளத்தைப் பெறவிருக்கிறார். அவரின் சம்பளத்தை ஒரு டிரில்லியன் (1,000,000,000,000) அமெரிக்க டாலருக்கு உயர்த்த அதன் பங்குதாரர்கள் ஒப்புக்கொண்டனர்.
சாதனைச் சம்பளத்தைக் கொடுக்க 75 விழுக்காட்டுப் பங்குதாரர்கள் இணங்கினர். நிறுவனத்தின் வருடாந்தரப் பொதுக் கூட்டத்தில் திரு மஸ்க்கின் ஊதியத்தை உயர்த்தும் அறிவிப்பு, பலத்த கைதட்டலுக்கு இடையே வரவேற்பைப் பெற்றது.
இப்போதைய நிலையிலும் திரு மஸ்க்தான் உலகின் ஆகப் பெரிய பணக்காரர். ஒரு டிரில்லியன் சம்பளத்தைப் பெறுவதற்கு அவர் சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும். அடுத்த பத்தாண்டில் டெஸ்லா மின்வாகன நிறுவனத்தின் சந்தை மதிப்பை வெகுவாக உயர்த்த வேண்டும்.
டெஸ்லா நிறுவனம், 20 மில்லியன் வாகனங்கள் விற்பதை அவர் உறுதிசெய்ய வேண்டும். ஒரு மில்லியன் ரோபோ டாக்சிகள் சாலைகளில் இயங்கவேண்டும். ஒரு மில்லியன் மனித இயந்திரங்கள் விற்கப்பட வேண்டும். அடிப்படை லாபம் 400 பில்லியன் அமெரிக்க டாலரை எட்ட வேண்டும்.
திரு மஸ்க், மிக அதிகமான ஊதியத்தைப் பெறுவதற்கு, டெஸ்லாவின் பங்கு மதிப்புக் கூடவேண்டும். தற்போது அதன் மதிப்பு 1.5 அமெரிக்க டாலராக உள்ளது. அதனை முதலில் 2 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கு உயர்த்திப் பின்னர் 8.5 டிரில்லியன் அமெரிக்க டாலருக்குக் கொண்டுசெல்ல வேண்டும். அவற்றையெல்லாம் நிறைவேற்றினால், பல மில்லியன் புதிய பங்குகள் அவருக்கு வெகுமதியாகக் கொடுக்கப்படும்.
திரு மஸ்க்கிற்கான உத்தேச ஊதியம் குறைகூறலுக்கும் உள்ளாகியிருக்கிறது. ஆனால் அதற்கும் பதில் தந்தது டெஸ்லா நிர்வாகக் குழு. சம்பளத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் திரு மஸ்க் பதவி விலகக்கூடும் என்று அது சொன்னது. அவரை இழக்கத் தயாராக இல்லை என்றும் நிர்வாகக் குழு கூறியது.
அறிவிப்புக்குப் பின்னர் டெக்சஸ் மாநிலத்தின் ஆஸ்ட்டின் நகரில் மகிழ்ச்சியில் திளைத்தார் மஸ்க். அவரின் பெயரை ஊழியர்கள் உரத்த குரலில் சொல்லச் சொல்ல அவர் நடனமாடினார்.
“எதிர்காலத்தில் டெஸ்லாவின் புதிய அத்தியாயத்தை நாம் எழுதப்போவதில்லை, மாறாக ஒரு புதிய புத்தகத்தையே உருவாக்கப்போகிறோம்,” என்றார் திரு மஸ்க்.

