பெய்ஜிங்: சீனாவில் தொடர்ந்து 104 நாள்கள் வேலை செய்த ஆடவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே ஒரு நாள் மட்டும் ஓய்வு எடுத்துக்கொண்ட அந்த 30 வயது ஆடவரின் உள்ளுறுப்புகள் செயலிழந்ததால் மாண்டதாகக் கூறப்பட்டது.
ஆடவரின் மரணத்தில் அவரது நிறுவனத்திற்கு 20 விழுக்காட்டுப் பங்கு இருப்பதாக செஜியாங் நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக ‘குவோங்ஸோ டெய்லி’ நாளேடு தெரிவித்தது.
உடலின் நோய் எதிர்ப்பாற்றல் வலுவிழக்கும்போது இவ்வாறு உள்ளுறுப்புகள் செயலிழக்க நேரிடும்.
ஆடவர் மாண்ட சம்பவம் சீனாவில் ஊழியர்கள் நடத்தப்படும் விதம் குறித்த விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது.
மாண்ட ஆடவர், சென்ற ஆண்டு (2023) பிப்ரவரியில் ஒரு நிறுவனத்தில் வண்ணம் பூசும் குத்தகை ஊழியராகச் சேர்ந்தார்.
பிப்ரவரி முதல் மே மாதம் வரை அவர் தொடர்ந்து 104 நாள்கள் வேலை செய்தார். இடையில் ஏப்ரல் 6ஆம் தேதி மட்டும் அவருக்கு ஓய்வு நாள் என்று கூறப்பட்டது.
மே 25ஆம் தேதி உடல்நலம் குன்றியதால் விடுப்பு எடுத்துக்கொண்டு தங்குவிடுதியில் ஓய்வு எடுத்தார்.
தொடர்புடைய செய்திகள்
மே 28ஆம் தேதி அவரது உடல்நிலை மோசமானதால் சக ஊழியர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது. ஜூன் 1ஆம் தேதி ஆடவர் மாண்டதாகக் கூறப்பட்டது.
சீனத் தொழிலாளர் சட்டத்துக்குப் புறம்பாக அவர் தொடர்ந்து 104 நாள்கள் வேலை செய்ததைக் குறிப்பிட்ட நீதிமன்றம், அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதற்கும் பின்னர் அவர் உயிரிழந்ததற்கும் அவர் வேலை செய்த நிறுவனம் 20 விழுக்காடு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியது.
நிறுவனம் அவரது குடும்பத்துக்கு மொத்தம் 400,000 யுவான் (S$73,403) இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அது உத்தரவிட்டுள்ளது.

