எரிசக்தி சேமிப்பு: வேலை நாள்களைக் குறைக்க பிலிப்பீன்ஸ் பரிசீலனை

எரிசக்தி சேமிப்பு: வேலை நாள்களைக் குறைக்க பிலிப்பீன்ஸ் பரிசீலனை

2 mins read
அரசாங்க அலுவலகங்களில் குளிரூட்டி அளவை 24 டிகிரி செல்சியசுக்கு குறையாமல் வைத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளார் அதிபர் மார்க்கோஸ்.
11bea23e-be4b-4178-af29-d04c8410c12a
வியாழக்கிழமை (பிப்ரவரி 5) பிலிப்பீன்ஸ் தரவுகள் ஆணையம் வெளியிட்ட விவரங்களின்படி, பிப்ரவரி மாதப் பணவீக்கம் 2.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஜனவரி மாதம் அது 2 விழுக்காடாக இருந்தது. - படம்: இபிஏ

மணிலா: பொதுவாக, ஒரு வாரத்தில் குறைவான வேலை நாள்கள் இருந்தால் குளிரூட்டிப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முடியும்.

அதன்வழி எரிசக்தியை மிச்சப்படுத்தலாம் என்பதால், வேலை நாள்களைக் குறைப்பது குறித்து பிலிப்பீன்ஸ் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

மக்கள் குளிரூட்டிப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்றும் அது கருத்துரைத்துள்ளது.

இருப்பினும் உற்பத்தித்துறையை அதிகம் சார்ந்த பொருளியலை அந்நாடு கொண்டுள்ளதால், அதன் வர்த்தகத் தொழில்துறை அமைப்பு அரசாங்கத்தின் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஏற்கெனவே குறைவான வளங்களைக் கொண்டு இயங்கிவருவதால், வேலை நாள்களைக் குறைப்பது பொருளியலுக்கு உகந்தது அல்ல என்று அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தென்கிழக்காசிய நாடுகளில் நாட்டின் தேவைக்கான முழு எண்ணெய்யையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நாடு பிலிப்பீன்ஸ்.

இச்சூழலில், மத்திய கிழக்கில் நடக்கும் போர், அதன் பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்துவிட்டது.

வியாழக்கிழமை (மார்ச் 5) பிலிப்பீன்ஸ் தரவுகள் ஆணையம் வெளியிட்ட விவரங்களின்படி, கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவு பணவீக்கம் பிப்ரவரி மாதம் 2.4 விழுக்காடு அதிகரித்தது.

இவ்வாண்டு ஜனவரி மாதம் அது 2 விழுக்காடாக இருந்தது.

அதிபர் ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர், தமது அரசாங்க அலுவலகங்களில் குளிரூட்டி அளவை 24 டிகிரி செல்சியசுக்குக் குறையாமல் வைத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

நீக்குப்போக்கான வேலை நேரத்தைக கடைப்பிடிக்கவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

பெட்ரோலியம் சார்ந்த பொருள்களுக்கு வரிகளைக் குறைப்பதற்கான உத்தரவுக்கு அவர் காங்கிரசிடம் இருந்து அவசர அதிகாரத்தைப் பெற முயற்சிகள் செய்யும் அதேவேளையில் வாரத்துக்கு நான்கு நாள் வேலைத் திட்டத்தையும் பரிசீலிப்பதாகத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்